“எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்கிறோம். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. புதிய வீடு, புதிய மனிதர்கள் என்றாலும், எல்லோருடனும் பழக முயற்சி செய்தேன். குறிப்பாக என் கோ-சிஸ்டருடன் நல்ல உறவு உருவாக்கணும் என்ற எண்ணத்தில், அவருடன் பேசவும், வேலைகளைச் சேர்ந்து செய்யவும் முயற்சி செய்தேன்.

ஆனால், காலப்போக்கில் சில விஷயங்கள் என்னை பாதிக்க ஆரம்பித்தது. வீட்டில் சின்னச் சின்ன முடிவுகள் எடுக்கப்படும் போது கூட முதலில் என் கோ-சிஸ்டரின் கருத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வீட்டில் என்ன சமைக்க வேண்டும் என்பது தொடங்கி, விடுமுறைக்கு எங்க செல்ல வேண்டும் என்பது வரை எல்லாவற்றையும் கோ- சிஸ்டர்தான் முடிவு எடுக்கிறார். நான் ஏதாவது சொல்ல முயற்சித்தால் அதை கவனிக்க மாட்டாங்க…இல்லயென்றால், ‘இது செட் ஆகாது’னு சொல்லிடுவாங்க. சில முடிவுகள் எடுக்கும் போது அப்படி ஒரு விஷயம் வீட்டில் நடந்தாக கூட எனக்குத் தெரியாது. நான் ரியாக்ட் பண்ண ஆரம்பித்தப் போது, ‘எனக்குத் தெரியாமல் ரகசியமாக பேச ஆரம்பித்தார்கள்’ இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்த தொடங்கியது.
என் கோ-சிஸ்டர் என்னை நேரடியாக தவறாக எதுவும் பேச மாட்டார். ஆனால், அவரின் உடல் மொழியும், மறைமுகமாகச் சொல்லும் வார்த்தைகளும் என்னை வருத்தத்தில் தள்ளியது. சில நேரம், நான் எதைச் செய்தாலும் அது ஒப்பீடு பண்ற மாதிரி தோன்றுகிறது. நான் சமைத்த உணவோ, நான் எடுத்த முடிவோ… எல்லாமே மதிப்பீடு செய்யுப்படும் உணர்வு இருக்கிறது.
சின்ன பிரச்னைகள் வரும் நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பமே கோ – சிஸ்டருக்குத்தான் சப்போர்ட் பண்றாங்க. என் கணவரோ, ‘அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ’ என சிம்பிளாக சொல்லி முடித்து விடுவார். எப்போதாவது வரும் என் பெற்றோர்களுக்கு வீட்டில் மரியாதை குறைய ஆரம்பிச்சுது. எரிச்சல் தாங்க முடியாமல் நான் சண்டையிட ஆரம்பித்த போது, என்னால் வீட்டில், ‘அமைதி குலைகிறது’ என்று பேச ஆரம்பித்தார்கள்.
எனக்கு கஷ்டமாக இருப்பது என்னன்னா… இந்த வீட்டில் நான் உண்மையிலேயே ‘சேர்ந்தவளா?’ என்ற கேள்விதான். நான் என்ன மாதிரி இருந்தா என்னை வீட்டில் ஒருத்தியா நினைப்பாங்கனு எனக்குப் புரியல. சில நேரங்களில் நான் தான் என்னை மாற்றிக்கொள்ளணுமோன்னு கூட தோணுது. என் கோ- சிஸ்டர் மீது எனக்கு பெரிய வருத்தம் இல்லை. என் வருத்தம் எல்லாம் இரண்டு மருமகள்களையும் சமமாக நடத்தாத மாமியார் – மாமனார் மீதுதான்.

இதையெல்லாம் என் கணவரிடம் வெளிப்படையாக பேச நினைக்கிறேன். ஆனால், இது ஒரு பெரிய பிரச்னையா அவர் எடுத்துக்கொள்வாரா? இல்லையெனில் ‘நீயே அதிகமாக யோசிக்கிற’ன்னு சொல்லிவிடுவாரோன்னு பயமா இருக்கு. அதனால் இதுவரைக்கும் நான் அமைதியாகத்தான் இருக்கிறேன். ஆனா அந்த அமைதியே இப்போ எனக்கு சுமையாகியிருக்கு. ஒரே வீட்டில் இருந்தும், நான் வெளியாள் மாதிரி ஃபீல் பண்ணுற இந்த உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகுது. சில நேரங்களில் தனிமை, சில நேரங்களில் சுய சந்தேகம் ‘என்னால்தான் பிரச்னையா?’ன்னு கூட நினைக்க ஆரம்பிச்சுட்டேன்.
ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்… அந்த வீட்டில் ‘நான் தேவையில்லாதவள்’ன்னு ஃபீல் ஆகுது… இது சாதாரணமா? இல்லையெனில் இந்த நிலைமையை நான் எப்படி புரிந்து கொண்டு, எப்படி கையாள பண்ண வேண்டும்?”
இது குறித்து உளவியல் ஆலோசகர் ப்ரினுவிடம் பேசினோம்.
அன்பு இல்லாத உறவு வலிக்கும்…
“இந்த வாசகி அனுபவிக்கும் உணர்வு பல கூட்டுக் குடும்பங்களில் அமைதியாக நடக்கும் ஒரு பொதுவான உளவியல் நிலை. ஒரே வீட்டில் இருந்தும் “நான் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவளா?” என்ற கேள்வி எழுவது, சாதாரணம் தான். ஆனால் அதை புறக்கணிக்கக் கூடாது. இந்த வாசகி பகிர்ந்திருக்கும் அனுபவத்தில், முக்கியமாக மூன்று விஷயங்கள் தெரிகிறது. ஒப்பீடு, புறக்கணிப்பு, மற்றும் சமமில்லாத அணுகுமுறை. உண்மையில் அன்பு இல்லாத உறவு வலிக்கும்…
ஆனால், அங்கீகாரம் இல்லாத உறவு உடைய ஆரம்பிக்கும்.
உளவியலில் இதை “Belongingness Need” பாதிப்பு என்று சொல்வார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் ‘நான் இந்த குடும்பத்தின் ஒரு பகுதி’ என்ற உணர்வு அடிப்படைத் தேவையாகும். அது கிடைக்காதபோது, மனதில் தனிமை, சுய சந்தேகம், பாதுகாப்பின்மை வருவது இயல்பு. அதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் போது, மற்றொருவருக்கு, ‘நாம் சமமில்லை’ என்ற உணர்வு உருவாகும். நான் எதைக் செய்தாலும் மதிப்பு கிடைக்கவில்லை என்ற எண்ணம் மெதுவாக மனஅழுத்தமாக மாறும். இங்கே முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் இது உங்கள் திறமைக்கோ, உங்கள் குணத்துக்கோ சம்பந்தப்பட்ட பிரச்னை இல்லை. இது அந்த குடும்பத்தில் ஏற்கெனவே இருக்கும் உயர்நிலை, மரியாதை என கண்ணுக்குத் தெரியாமல் கட்டமைக்கப்பட்டு இருக்கும் வழக்கங்கள் பற்றியது.

தீர்வு
இந்த நிலையை சமாளிக்க முதலில் செய்ய வேண்டியது உங்களை நீங்களே சந்தேகிப்பதை தவிர்க்க வேண்டும். ‘என்னால்தான் பிரச்னை’ என்று நினைக்க ஆரம்பித்தால், அது உங்கள் சுயமதிப்பை பாதிக்கும்.
அடுத்ததாக, நீங்கள் இதுவரை செய்தது போல அமைதியாக எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்துக்கொள்வது தீர்வு அல்ல. அந்த அமைதியே இப்போது உங்களுக்கு சுமையாக மாறியுள்ளது. அதனால், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியம். குறிப்பாக, உங்கள் கணவருடன் அமைதியான நேரத்தில் பேசுங்கள். யாரையும் குற்றம் சாட்டாமல், ‘இந்த சூழலில் நான் தனிமையாக ஃபீல் பண்ணுறேன்’ என்று சொல்லுங்கள். உங்கள் அனுபவத்தை அவர் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
அதே நேரத்தில், சில விஷயங்களில் மெதுவாக எல்லைகள் அமைக்கலாம். எல்லா முடிவுகளிலும் நீங்கள் தவிர்க்கப்படுகிறீர்கள் என்றால், “இதில் என் கருத்தையும் கேட்கலாம்” என்று சொல்ல ஆரம்பிக்கலாம். ஆரம்பத்தில் அது ஏற்கப்படாமல் இருந்தாலும், உங்கள் இருப்பை -ஐ பதிவு செய்யும் ஒரு வழியாக அது இருக்கும். சமையல் போன்ற விஷயங்களில், ‘ நாளை இதை சமைக்கலாமா?” என்று கேட்பதற்கு பதிலாக ‘இதை சமைத்து விடுகிறேன்’ என்று உங்கள் முடிவுகளை பதிய வைக்கலாம்.
முக்கியமாக, co-sister-ஐ போட்டியாளியாக பார்க்க வேண்டாம். இந்த நிலைமையை ஒரு போட்டியாக எடுத்துக்கொண்டால், அது உங்களின் மன அமைதியை மேலும் குலைக்கும். இது ஒரு உறவு பிரச்னை… போட்டி அல்ல.

மேலும், உங்கள் வாழ்க்கையை முழுவதும் இந்த குடும்ப சூழலுடன் மட்டும் இணைத்து விடாதீர்கள். உங்கள் நண்பர்கள், உங்கள் விருப்பங்கள், உங்கள் தனிப்பட்ட முன்னேற்றம் இவைகளில் கவனம் செலுத்துவது உங்களுக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கும். அது இந்த மாதிரியான சூழல்களை சமாளிக்க உளவியல் வலிமையை தரும்.
எல்லாவற்றிற்குப் பிறகும், சூழல் மாறாமல் தொடர்ந்தால், குடும்பத்தில் தெளிவான மாற்றம் வரவில்லை என்றால், தம்பதியர் சில மாதங்கள் தனியாக இருக்க திட்டமிடலாம். சில சமயம் பிசிக்கல் ஸ்பேஸ் கூட எமோஷனல் ஸ்பேஸ்க்கு உதவும்.
இது ஒரு சிறிய பிரச்னைதான். பதட்டம் அடையாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்…நிச்சயம் மீண்டு வரலாம்” என்று விளக்கினார்.
ஆல் தி பெஸ்ட்!
___________________________________
வாசகர்களே இந்தப் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே…
வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். [email protected] என்ற மின்னஞ்சளுக்கு ‘பேசும் மனது’ என Subject – ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!