கண்ணே கண்மணியே: "நான் இறைவனுக்காக எழுதிய பாடல் இது" – மஃஷூக் ரஹ்மான் | வரித்துணையே 16

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’.

Kanne Kanmaniye - Mashook Rahman
Kanne Kanmaniye – Mashook Rahman

இன்றைய பகுதிக்கு, தனுஷின் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் வரும் ‘கண்ணே கண்மணியே’ பாடல் பற்றி பாடலாசிரியர் மஃஷூக் ரஹ்மானிடம் பேசினோம்.

ஏ.ஆர். ரஹ்மான், சூஃபி வடிவில் இசையமைக்கும் பாடல்களுக்கு தமிழில் வரிகள் மூலம் வடிவம் கொடுப்பவர் மஃஷூக் ரஹ்மான்.

பாடலாசிரியர் மஃஷூக் ரஹ்மான், “நான் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படத்தை இரண்டு ஆன்மாவுக்கான தேடலாகப் புரிந்துகொண்டேன். இன்று காதலில் பல பரிணாமங்கள் வந்துவிட்டன. இன்று அது கன்ஸ்யூமரிசமாகவும் வந்துவிட்டது.

நான் ஆசிரியராகவும் சில காலங்கள் இருந்தேன். அப்போது என்னுடைய மாணவர்களிடம் காதல் பற்றி நிறைய உரையாடியிருக்கிறேன். காதலை என்றுமே நாம் இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கக்கூடாது. காதலில் எந்தவொரு விஷயத்தையும் சொந்தமாக்குவது முக்கியம் கிடையாது. பரஸ்பரம் புரிந்துகொள்வதுதான் காதல். இந்தத் திரைப்படத்தில் நாயகன் ‘நான் நேர்மையாகக் காதலிக்கிறேன்’ என்பதை வெளிப்படுத்துவார்.

Kanne Kanmaniye - Mashook Rahman
Kanne Kanmaniye – Mashook Rahman

இதில் கிளைமேக்ஸ் மிகவும் முக்கியமானது. நான் நிகழ்த்தும் தவறுகளை, என் மனைவி மூலமாகத்தான் நான் புரிந்துகொண்டேன். அப்படிதான் இந்தப் படத்தின் கிளைமேக்ஸில், அவர்கள் செய்த தவறைப் பரஸ்பரம் இருவரும் புரிந்துகொள்வார்கள்.

காதலில் ப்ளஸ் & மைனஸ் என இரண்டையும், இருவரும் புரிந்துகொண்டால், அதில் பிளவு என்றுமே ஏற்படாது. அதைதான் இந்தக் கதையும் உணர்த்துவதாக நான் புரிந்துகொண்டேன். இதைதான் படத்தின் நாயகனும் நாயகியும் வெளிப்படுத்தினார்கள்.

இதனைப் புரிதலில் வைத்துக்கொண்டுதான் ‘கண்ணே கண்மணியே’ பாடலை நான் எழுதினேன். முதலில் பாடல் வெளிவந்தபோது பெரியளவில் மக்களுக்குச் சென்று சேரவில்லை.

ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கான்சர்டில், ரஹ்மான் சார் இந்தப் பாடலின் தமிழ் வெர்ஷனைப் பாடியிருந்தார். அதன் பிறகு இந்தப் பாடலைத் தேடிக் கண்டுபிடித்து ரசிகர்கள் கேட்கத் தொடங்கினார்கள். எனக்கு படத்தில் கிளைமேக்ஸ் மூலம் ஒரு தெளிவு கிடைத்துவிட்டது.

சூழலாக எனக்கு எதையுமே சொல்லவில்லை. ரஹ்மான் சார் எனக்கு டியூனை மெயில் மூலம் அனுப்பினார். ‘சூஃபி-யில் இந்தப் பாடலை எழுதுங்கள். உங்களுடைய விருப்பம்தான்’ எனச் சுதந்திரம் தந்துவிட்டனர். பிறகு எனக்கும் இறைவனுக்குமான பாடலாக இதனை எழுதினேன். இறைவனிடம் நான் வேண்டும் விஷயங்களாக டியூனுக்கேற்ப இந்தப் பாடலை எழுதினேன்.

Kanne Kanmaniye - Mashook Rahman
Kanne Kanmaniye – Mashook Rahman

இந்தப் பாடலின் முதல் வெர்ஷனைக் கேட்ட ரஹ்மான் சார், ‘நன்றாக இருக்கிறது. ஆனால், இன்னொன்று எழுதலாம்’ எனச் சொல்லிவிட்டார். அப்போது ஸ்டுடியோவில் இருந்தே மீண்டும் வேறொரு வெர்ஷன் எழுதி அனுப்பிவிட்டேன். பிறகு ஸ்டுடியோவிலேயே ஒரு ஓரமாகத் தூங்கியும் விட்டேன்.

மீண்டும் அதிகாலையில், ப்ரேயருக்காகத் தூக்கத்தில் இருந்து எழுந்தேன். அப்போது ரஹ்மான் சார் மெயில் மூலமாக, ‘கிரேட் லைன்ஸ்’ என அனுப்பியிருந்தார். இந்தியில் ‘சஞ்னா’ என இந்தப் பாடல் தொடங்கும். சஞ்னா என்றால் அலங்கரிக்கப்பட்டவள் என்று அர்த்தம். (புன்னகையோடு) என் மனைவியும் பெயரும் அதுதான்!

இந்தியில் எழுதப்பட்டதைப் போல, தமிழில் ‘அழகே அழகே’ என எழுதினேன். ரஹ்மான் சார் அதனை ‘கண்ணே கண்மணியே’ என மாற்றிக் கொள்ளலாமா எனக் கேட்டார். அப்படிதான் அந்த வரி இந்தப் பாடலுக்குள் இணைந்தது. அதற்கு அடுத்ததாக உன்னோடு சரணாகிறேன் என்கிற வரியை நான் அமைத்திருந்தது ரஹ்மான் சாருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.

‘நல்லா எழுதியிருக்குயா’ எனப் பாராட்டவும் செய்தார். என்னிடம் பாராட்டிய பிறகு ஸ்டுடியோவிலுள்ள சவுண்ட் இன்ஜினியர்களிடம் நான் நன்றாக எழுதியிருப்பதாகச் சொன்னாராம்” என்றார்.

Kanne Kanmaniye - Mashook Rahman
Kanne Kanmaniye – Mashook Rahman

தொடர்ந்து பேசியவர், “நான் இறைவனுக்குச் சொன்ன விஷயம்தான் இந்தப் பாடல். அது இந்தப் படத்திற்கும் செட் ஆகிவிட்டது. இந்தப் பாடல் மட்டுமல்ல, காதலின் வெவ்வேறு முகங்களைச் சொல்லக்கூடிய மூன்று பாடல்களை இந்தப் படத்தில் நான் எழுதியிருந்தேன். தமிழ் சினிமாவின் சிறந்த காதல் பாடல்கள் அனைத்தும் வலியைப் பற்றியதாக இருக்கும்.

ஏனென்றால், வலிதான் உண்மை. அதுதான் உண்மை நிலையை நமக்குக் காட்டும். நான் பெரும்பாலும் வலியைப் பிரதிபலிக்கும் காதல் பாடல்களைத்தான் எழுதுவேன். சில நேரம் வியாபாராரீதியாக மாற்றம் செய்து எழுத வேண்டியது இருக்கும். ஆனால், இன்று வரைக்கு எனக்கு அப்படியொரு நிலை வரவில்லை. இந்தப் பாடல் வெளிவந்தபோது, ‘இந்தப் பாடலை இவரை ஏன் எழுத வைத்தீர்கள்’ எனத் திட்டினார்கள். இன்று என்னைக் கொண்டாட வேண்டும் எனப் பாராட்டுகிறார். அனைத்திற்கும் நன்றி!” என்றார் மலர்ந்த முகத்துடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.