ஸ்லோ பாய்சன் கொடுத்து மனைவி கொலை; UPI செயலியில் காதலியுடன் மெசேஜ்- நாடகமாடிய டாக்டர் சிக்கியதெப்படி?

பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதம் கிருத்திகா ரெட்டி என்பவர் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அவரின் கணவர் டாக்டர் மகேந்திர ரெட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் கிருத்திகா இறந்து போனார். இது இயற்கையான மரணம் என்றே போலீஸார் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் விசாரணையில் மகேந்திர ரெட்டிக்கு இக்கொலையில் தொடர்பு கொண்டு இருப்பது தெரிய வந்தது. மகேந்திர ரெட்டி தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி தன் மனைவி படிப்படியாக இறக்கும் வகையில் அவருக்கு மருந்து கொடுத்து கொலைசெய்துள்ளார். அதோடு டாக்டர் மகேந்திர ரெட்டிக்கு அவர் பணிபுரியும் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஹர்ஷிதா என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இருவருக்கும் இடையேயான தகவல் தொடர்புகள், மெசேஜ்கள் இக்கொலைக்கு முக்கிய ஆதாரமாக சிக்கி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் செய்தால் தெரிந்துவிடும் என்பதால் யு.பி.ஐ. பேமென்ட் செயலி மூலம் அனைத்து தகவல்களையும் மகேந்திர ரெட்டி தனது காதலிக்கு அனுப்பி இருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட டாக்டர் மகேந்திரா மீது போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆவண சாட்சியங்களை போலீஸார் இணைத்துள்ளனர்.

`போலீஸாரிடம் நண்பர்கள் என்று சொல்!’

போன்பே மூலம் மகேந்திர ரெட்டி தனது காதலியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அதோடு அவற்றை அழித்துவிட்டார். ஆனால் தடயவியல் நிபுணர்கள் அத்தகவல்களை மீட்டு எடுத்துள்ளனர். மேலும் மகேந்திரா தனது மனைவியை கொலைசெய்வதற்கு முன்பே, அது குறித்து தனது காதலியுடன் மெசேஜ் மூலம் தெரிவித்துள்ளார். மகேந்திரா அனுப்பி இருந்த ஒரு மெசேஜில், “இந்தச் செய்தியைப் பார்த்த பிறகு, எனக்கு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்ய வேண்டாம். அனைத்தும் ஒரு நிலைக்கு வந்த பிறகு, நானே உன்னை அழைப்பேன். பெரும்பாலும் காவல்துறையினர் உன்னை அழைத்து, நமக்கிடையேயான உறவு என்ன என்று விசாரிப்பார்கள்; அப்போது நாம் நண்பர்கள் என்று கூறு” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு மெசேஜில், ”என்னிடம் ஆதாரம் இல்லை, ஆனால் நான் கிருத்திகாவைக் கொன்றுவிட்டேன். நான் சிறைக்குச் செல்வேன்”என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியில், குற்றத்தை செய்துவிட்டு அதற்கு வருந்துவது போன்ற தகவல்கள் இடம் பெற்று இருந்தது. தான் இனி “ஒரு கொலையாளியைப் போலவே வாழ்வேன்” என்று மகேந்திரா குறிப்பிட்டு இருந்தார். இருவரும் 2024ம் ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். ஒரே ஆண்டில் தனது காதலிக்காக மனைவியை மகேந்திர ரெட்டி கொலைசெய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.