“முதல்வர் வாகனம் முன்னே… செய்தி துறை வாகனம் பின்னே!” – செய்தி துறைக்கு செக் வைக்கும் அ.தி.மு.க!

தமிழக முதல்வரின் பிரசாரத்திற்கு தமிழக அரசின் ஊழியர்களையும், செய்தி துறையையும் தி.மு.க தரப்பு தங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பரபரப்பு புகார் ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளது. 

அ.தி.மு.க வின் எம்.பி-யும் அந்த கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை இன்று காலை  தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் ஆணைய அலுவலரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் “தமிழக அரசின் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறை ஆளும் கட்சியான தி.மு.க-வுக்கும்.   முதல்வருக்கும் ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்பதுரை

 முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் போது, TN 06 AU 2345 என்ற பதிவு எண்ணைக் கொண்ட “TN GOVT PRESS” ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் அவருடன் இணைந்து செல்கிறது. அந்த வாகனத்தில் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறையின் இணை இயக்குநர் பிரபு குமார், தற்காலிக வீடியோ கிராபர் திரு. முகில் , செய்தி துறை ஓட்டுநர் திரு. பிரபாகர் மற்றும் தமிழ்நாடு மின்விநியோகக் கழக ஊழியர் திரு. லோகேஷ் ஆகியோர் முதல்வருடன் மாவட்டங்களுக்கு பிரசாரங்களில்   பயணம் செய்கின்றனர்.

இந்த அதிகாரிகள் தி.மு.க கட்சி மற்றும்  முதல்வரும் தொடர்புடைய தேர்தல் பிரச்சார காட்சிகள் மற்றும் தகவல்களை சேகரித்து, அவற்றை செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில்  பரப்ப உதவி செய்கின்றனர். இதற்காக அரசின் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறைக்கு சொந்தமான வீடியோ கேமரா, புகைப்பட கருவிகள் மற்றும் நேரலை ஒளிபரப்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெளிப்படையாக மீறுவது மட்டுமல்லாமல், அரசின் அதிகாரப்பூர்வ இயந்திரங்களை அரசியல் நலன்களுக்கு தவறாக பயன்படுத்துவதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

நேற்று காலை பா.ஜ.க தரப்பு பத்திரிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சென்னை மாநகர ஆணையாளர் அருண் நடவடிக்கைகள் இருக்கிறது. அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என புகார் அளித்தனர். அதை தொடர்ந்து நேற்று இரவே சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் மாற்றப்பட்டார். இன்று அ.தி.மு.க செய்தி துறை அதிகாரிகளின் பெயரையே பட்டியலிட்டு, தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளது. இதனால், செய்தி துறை அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றும் நடவடிக்கையில் இறங்கலாம் என்கிற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.