நீண்ட காலம் கழித்து சி.எஸ்.கே ரசிகர்களின் வாழ்க்கையில் ஒரு கபிகபி நடந்திருக்கிறது. ‘இதையெல்லாம் பார்த்து எவ்வளவு நாளாச்சுல்ல…’ என்பது போல ஆர்ப்பரிப்பில் துள்ளிக் குதிக்கின்றனர் சேப்பாக்கத்தில் குழுமியிருந்த ரசிகர்கள். ஆம், சென்னை அணி சேப்பாக்கத்தில் இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதிசயம்…அற்புதம்…நிகழ்ந்துவிட்டது.

ஒரு வாரமாக டேட்டா தீர ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாட்டை பயன்படுத்தியதற்கு பலன் கிடைத்து, இன்றைய போட்டியின் லெவனில் டெவால்ட் ப்ரெவிஸ் இடம்பெற்றிருந்தார். ஆனாலும் எந்த மாற்றமும் இல்லை. டாஸை ருத்துராஜ் தோற்றார். அப்போதே மேட்ச்சை தோற்ற பாடி லாங்குவேஜூக்கு சென்றார். ‘தோத்தா கூட பரவால்ல…அவன மூஞ்ச மட்டும் அப்படி வைக்க சொல்லாதீங்க’ என்பது சென்னை ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. போட்டி தொடங்கியது.
சாம்சனும் ருத்துராஜூம் ஓப்பனர்கள். இருவரையும் நமத்துப் போன ஊசிப் பட்டாசுகளைப் போல சென்னை ரசிகர்கள் பார்த்தனர். ‘உன்னால முடியாதுன்னு யாராவது சொன்னா, நீ நம்ப வேண்டிய உன்ன இல்ல, அவங்களை…’ என்கிற டயலாக் மண்டைக்குள் சுழல கிறக்கத்துடன் தான் பேட்டிங் ஆடினார் ருத்துராஜ். சாம்சன் அப்படியில்லை.

அட…ப்ரைட் ஆயிட்டான்யா..’ என்பதை போல ஆரம்பத்திலேயே நல்ல ஷாட்களை அடித்து நம்பிக்கை கொடுத்தார். அடைமழை அடித்து வெளுக்குமென நினைப்போம். அன்றைக்குதான் சூரியன் ‘ஆரா 10/10” மோடில் சுட்டெரிக்கும். அடிக்கிற வெயிலுக்கு மழையா வாய்ப்பே இல்லை என்போம். அன்றைக்குதான் முட்டிக்கால் மிதக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்க மழை அடிக்கும். சாம்சனை இந்த கேட்டகரியில் சேர்த்துவிடலாம். கடந்த 3 போட்டிகளில் சோபிக்காததால் அவர் மீது பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால், இது சாம்சனின் சனிக்கிழமையாக மாறிவிட்டது. அந்த அடி அடித்தார்.
என்னய்யா நீயெல்லாம் அடிக்க ஆரம்பிக்குற’ என ஷாக்கில் நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் ருத்துராஜ். ‘பாஸ் நீங்களும் அடிச்சு பார்முக்கு வந்துட்டா நான் தனிமரம் ஆயிடுவேன்’ என சாம்சனிடம் சைகை மூலமாக எவ்வளவோ உணர்த்த நினைத்தார். சாம்சன் அதையும் கண்டுக்கவே இல்லை. ‘யோவ் ஓட்டு போட்டுட்டு வந்துருக்க விரல்ல மை அழிஞ்சுற போதுய்யா…’ என ருத்துராஜ் எவ்வளவோ சொல்லி பார்த்தும் சாம்சன் அசரவில்லை என உள்ளே வாட்டர் பாட்டில் கொண்டு போன ஒரு சப் வீரர் நமக்கு தகவல் கொடுத்தார். ‘டேய்…குமரா உனக்கு பாக்ஸிங் தெரியுமாடா…’ என்பதைப் போல பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி பெவிலியனில் அமர்ந்திருக்க 15 பவுண்டரிக்களையும் 4 சிக்சர்களையும் அடித்து சதத்தை நிறைவு செய்திருந்தார் சாம்சன்.

சேட்டனின் அதிரடியில் சேப்பாக்கம் குலுங்கியது. ஆனால், உள்ளே ஒரு பயம். ‘சீசனுக்கு ஒரு மேட்ச்தான் அடிப்பேன். அந்த ஒரு மேட்ச் இதுதான். இதற்கு மேல் எதிர்பார்க்காதீர்கள்’ என சேட்டன் மைக்கிலேயே பேசிவிடுவாரோ என ரசிகர்கள் பதறினர். நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இடையில் ஆயுஸ் மாத்ரே ருத்துராஜ் இடத்தை அப்படியே நிரப்பியிருந்தார். உருட்டு உருட்டென உருட்டினார். ‘என்ன சிம்ரன் இது’ என ப்ளெம்மிங் பெவிலியனிலிருந்து கண்ணை உருட்ட அதன்பிறகுதான் கொஞ்சம் அடித்து ஆடி அரைசதம் கடந்தார். உடனடியாக, ஸ்டீரிட் கிரிக்கெட்டில் இடையில் ‘அண்ணனுக்கு ரெண்டு பந்து போடுங்க…’ என கண்சிவந்து வரும் அண்ணனைப் போல மாத்ரேவை ரிட்டையர் அ வுட் ஆக்கிவிட்டு சிவம் துபே உள்ளே வந்தார். கடைசி 2 ஓவர்களில் அவர் ஒரு காட்டு காட்ட சென்னை அணி 212 ரன்களை எடுத்தது.
இப்போதும் சேப்பாக்கம் மைதானம் அமைதியாகவே இருந்தது. காரணம், எதிரணியின் மீதான பயம் கிடையாது. சொந்த அணியின் பௌலர்கள் மீதான பயம். பேட்டர்களை கஞ்சத்தனத்தோடு வளர்த்த ப்ளெம்மிங், பௌலர்களை மட்டும் அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களாக வளர்த்துவிட்டார். அதற்கேற்ப ஓப்பனிங்கில் பதும் நிஷாங்க அதிரடியாக ஆடினார். 4 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது டெல்லி.

சேப்பாக்கத்தின் DJ வேறு நேரம் காலம் புரியாமல் ‘இந்தப் படை போதுமா…இன்னும் கொஞ்சம் வேணுமா’ எனக் கூவினார். இருக்குறவனை வச்சு வாங்குற அடி போதாதாய்யா என சென்னை ரசிகர்கள் கோக்குமாக்காக விழித்தனர். ஆனால், என்ன செய்வது எப்போதும் நாம் எதிர்பார்ப்பது மட்டுமே நடப்பதில்லையே. திடீரென ஒரு அற்புதம்…அதிசயம் நிகழும். சேப்பாக்கத்தில் அது நடந்தது. சென்னை அணியின் பௌலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஓவர்டன், கம்போஜ், குர்ஜப்னீத், கலீல் என வேகங்கள் அத்தனை பேரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக மில்லரை ஓவர்டன் வெளியேற்றி சென்னை ரசிகர்களின் நெஞ்சில் பாலை வார்த்தார்.
ஹேமங் பதானி எதாவது ராஜதந்திரங்களை செய்வார் என கேமரா மேன் அவரையே உன்னிப்பாக காட்டிக் கொண்டிருந்தார். அதற்கேற்ப ஸ்டப்ஸூம் கடைசி வரை நின்று கொஞ்சம் கடுப்பாக்கினார். கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் அடிக்க வேண்டும் எனும் நிலைக்கு போட்டியை கொண்டு வந்தார். 19 வது ஓவரை ஓவர்டன் வீசினார். இந்த ஓவரில் ஒயிடு வீசி கடுப்பாக்கினாலும் ஸ்டப்ஸை மிட் ஆப்பில் கேட்ச் ஆக்கி போட்டியை வென்று கொடுத்தார்.
சென்னை அணிக்கு சீசனின் முதல் வெற்றி இது. இரண்டு வார காத்திருப்புக்கு பிறகு வந்திருக்கிறது. சென்னை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி தீர்த்தாலும், இன்னொரு பக்கம் ‘தோனி இல்லாம ஜெயிக்க எப்படிய்யா மனசு வந்துச்சு’ என பீல் செய்து கொண்டிருந்தனர். ‘ஆனாலும் இவனுக புது ரகம் சாரே..’