திருநெல்வேலியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியிடம் கேஸ் லிண்டர் விலை குறைப்பு என்னாச்சு என்று கேள்வி கேட்க அதற்கு சற்று திணறிய உதயநிதி பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. நாளையுடன் (பிப்ரவரி 17) பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால் ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக கூட்டணி 55 வார்டுகளில் போட்டியிடுகிறது. அதில் திமுக 48 வர்டுகளிலும் காங்கிரஸ் 3 வார்டுகளிலும் மற்ற கூட்டணி கட்சிகள் 5 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காணோலி வழியாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதே நேரத்தில், திமுக சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி டவுன் வாகையடி முனை பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி மக்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏமாற்றியதைப் போல மீண்டும் ஏமாற்ற மாடீர்கள் என்று நம்புகிறேன். (திருநெல்வேலியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார்.) மக்களின் எழுச்சியைப் பார்க்கும்போது தேர்தல் பரப்புரையே டேவையில்லை, வெற்றி உறுதி என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, பாஜக அதிமுக கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திமுக விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வர்களில் முதல் இடத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருப்பதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி கஜானாவை காலி செய்து விட்டு சென்றபோதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று சொன்னதை செய்து காட்டினார் உதயநிதி கூறினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்னாச்சு என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை எதிர்பாராத உதயநிதி சற்று திணறினாலும், எட்டு மாதத்தில் படிப்படியாக சொன்ன திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்த அவர் தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டது போன்று சிலிண்டர் விலை, டீசல் விலை உள்ளிட்டவை குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனைக் குறிப்பிட்டு, கேஸ் சிலிண்டர் விலை எப்போது குறைக்கப்படும் என்று கேள்வி எழுப்பினர். அதே போல, கடந்த வாரம், குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“