`தென்னகத்தின் சின்னத் திருப்பதி’ என அழைக்கப்படும் அரியலூர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜா பெருமாள் கோயிலின் பத்து நாள் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடிமரம் அருகே எழுந்தருளினார். இதனையடுத்து வேதமந்திரங்க முழங்க பெருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா! கோவிந்தா!’ என கோஷமிட்டனர்.
இதனையடுத்து வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, 7 – ம் நாள் விழாவாக திருக்கல்யாணம் நடைபெறும்.

பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9- ம் திருநாளான வருகின்ற 18-ம் தேதி அதிகாலையில் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து மறுநாள் ஏகாந்த சேவை சிறப்பாக நடைபெறும். இக்கோயில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கானோர் வருகையை முன்னிட்டு தங்கும் இடவசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, அன்னதானம் போன்ற வசதிகளைக் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும், பக்தர்களின் வருகைக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விழாக்கால சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும் பக்தர்களின் பாதுகாப்பு நலன்கருதி அரியலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்த்திருவிழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.