மகாபலிபுரத்தில் தமிழக சட்டப் பேரவையை மாற்றுவதற்கான வேலைகளை திமுக அரசு தொடங்கி உள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று தரிசனம் செய்த அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,
“மகாபலிபுரத்துக்கு தமிழக சட்டப்பேரவையை மாற்றுவதற்காக 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி, அதற்கான பணிகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். மாகாபலிபுரத்தில் புதிய சட்டப் பேரவையை அமைக்க முயற்சி நடந்து வருகிறது.
அருகிலேயே திமுக தனது அலுவலகம் ஒன்றை திறப்பதற்காக இடம் வாங்கியுள்ளது. மகாபலிபுரம் பகுதியில் நூறு ஏக்கர் நிலத்தை அமைச்சர்களின் பினாமி பெயரில் வாங்கியுள்ளனர்.
வால்மார்ட் நிறுவனம் அமைக்க அதிமுக ஆட்சியில் எதிர்ப்பு தெரிவித்து போராடிய கட்சிகள், தற்போது திமுக ஆட்சியில் லூலூ நிறுவனம் அமைய உள்ளதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளன.
உளவுத்துறையில் 35 ஆண்டுகள் பணியில் இருந்த அனுபவம் உள்ள தமிழக ஆளுநர் கூறும் கருத்து தவறாக இருக்காது. கேரள மாநிலத்தில் இந்த ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’வின் செயல்பாடுகளைப் அறிந்த யாரும் ஆளுநரின் கருத்தை மறுத்து பேசமாட்டார்கள்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.