தருமபுரி அருகே உள்ள மொரப்பூர் பகுதியில் ஒரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதனால், மாணவியின் பெற்றோர் மொரப்பூர் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமி பேருந்தில் செல்லும்போது, பாதியிலேயே இறங்கிச் சென்றது தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில், அந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், புலியூர் பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவரும் பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்திருக்கிறது. விசாரணையில், ஆசிரியர்தான் மாணவியை பைக்கில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு ஆய்வு நடத்தினர்.
அதில், ஏற்கெனவே திருமணமான முபாரக், பள்ளி மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிக் கடத்தி சென்றிருக்கின்றார். இந்த நிலையில்தான், அயோத்தியபட்டினம் பகுதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அந்த வழியாக வந்த முபாரக் பள்ளி மாணவியுடன் சிக்கியிருக்கிறார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் மொரப்பூர் பகுதி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பள்ளி மாணவியைக் கடத்திச்சென்ற ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். பள்ளி படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்ற ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்தனர். அதையடுத்து, காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.