டெக்சாஸ்: அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் மறைந்தார்.
அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞரை போலீஸார் சுட்டுத் தள்ளினர். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய ஆசிரியை இம்ரா கார்சியாவும் கொல்லப்பட்டார். அவர் 4ஆம் வகுப்பு ஆசிரியராக இருந்து வந்தார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆசிரியை இர்மா கார்சியாவின் கணவர் ஜோ கார்சியா நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இத்தம்பதிக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இது குறித்து ஜோ கார்சியாவின் உறவினர் ஜான் மார்டினெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மனமுடைந்த நிலையில், மிகுந்த வேதனையுடன் இச்செய்தியைப் பகிர்கிறேன். இர்மாவின் கணவர் ஜோ கார்சியா உயிரிழந்தார். அவர் மனைவியின் இழப்பை தாங்க இயலாமலேயே உயிரிழந்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ராப் எலிமென்டரி பள்ளிக் கூடம் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.