திருவள்ளூரில் மாயமான இளைஞர் – ராஜபாளையத்தில் சாக்குமூட்டையில் அழுகிய சடலமாக மீட்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாயமான இளைஞர் ராஜபாளையம் அருகே கண்மாயில் அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை சிஎம்ஆர் சாலையை சேர்ந்த மாரிமுத்து என்ற சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் இருந்து வேலைக்கு சென்றவர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை என்ரு கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தந்தை துரைப்பாண்டி அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வந்தனர்.
பல்வேறு இடங்களில் மாரிமுத்துவை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 12 வது பட்டாலியனில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த வில்வதுரை என்பவருக்கும் மாரிமுத்துவுக்கும் இடையே விரோதம் இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
image
விசாரணையில் வில்வதுரை தன்னுடைய நண்பர்களான இசக்கி ராஜா மற்றும் ரவிக்குமார் ஆகியோருடன் இணைந்து மாரிமுத்துவை கொலை செய்தது தெரியவந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஆளில்லாத நீரோடையில் வைத்து மாரிமுத்துவை மூவரும் இணைந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவரை சாக்குமூட்டையில் கட்டி காரில் கொண்டு வந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்துள்ள தளவாய்புரத்தில் அமைந்துள்ள புனல்வேலி கண்மாயில் கல்லைக்கட்டி வீசிச் சென்றது தெரியவந்தது. குற்றவாளிகளை உடன் அழைத்துக்கொண்டு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குற்றவாளிகள் அடையாளம் காட்டிய இடத்தில் தேடியபோது மாரிமுத்துவின் சடலம் அழுகிய நிலையில் சாக்குமூட்டையில் இருந்தது.
image
கண்மாயில் இருந்து உடலை மீட்ட தளவாய்புரம் காவல்துறையினர் தற்போது கண்மாய் கரையில் உடலை வைத்துள்ளனர். தகவல் அறிந்த சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கண்மாய் பாலம் அருகே குவிந்து நின்றதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. சம்பவ இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பொறுப்பு டிஎஸ்பி சபரிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கொலை நடந்த இடம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்று கூறப்படும் நிலையில், உடல் கிடந்தது விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதி.
எனவே கொலைக்கான காரணம் குறித்த விசாரணையை எந்த மாவட்ட காவல்துறை செய்வது என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருவதாகவே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே கொலை நடந்ததற்கான காரணம் தெரியவரும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.