`உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க முடியாது'- டாஸ்மாக்கை மூட நீதிமன்றம் மறுப்பு

`அரசு டாஸ்மாக் கடையினால் பொது மக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாததால் டாஸ்மாக் கடையை பூட்ட உத்தரவிட முடியாது’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக உணர்ச்சி வசப்பட்டு நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி நடைகாவு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “கன்னியாகுமரி நித்திரவிளை அருகேயுள்ள நம்பாளிசாலை ஆற்றுப்புரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இந்த டாஸ்மாக்குக்கு எதிராக அப்பகுதிகள் மக்கள் போராடி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, அந்த டாஸ்மாக் கடையை மூடுமாறு உத்தரவிட வேண்டும்” எனக கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
image
இந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,` வழக்கறிஞர், ஆணையர் ஆய்வு செய்தபோது, விதிப்படி கடை இயங்குவதே தெரியவந்தது. குறிப்பிட்ட தொலைவில் பள்ளி கல்லூரியோ, வழிபாட்டு தலங்களோ இல்லை’ என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பதில் மனுவை அடிப்படையாக வைத்து, ஜார்ஜ் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. வழக்கை தள்ளுபடி செய்த பின் நீதிபதிகள், `போராட்டம் நடக்கிறது என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.