ராமநாதபுரம்: தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தடை செய்ய வேண்டும் என பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள எம்பி தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற தமிழக பாஜக தலைவர் பல்வேறு பணிகளை வழங்கியுள்ளார்.
அதன்படி பாஜக அரசின் 8 ஆண்டுகால ஆட்சியில் பயனடைந்த இஸ்லாமியர், கிறிஸ்தவ பயனாளிகளை சந்தித்து பாஜக அரசு சிறுபான்மையினருக்கு செய்து வரும் நலத்திட்டங்களை விளக்கி வருகிறேன். அதன்படி இஸ்லாமியர்கள்அதிகம் வசிக்கும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, வேலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். புதுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் வருவதற்காக நேற்று முன்தினம் இரவு காரில் வந்தபோது, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் என்னை ஆயுதங்களுடன் தாக்கினர்.
அதில் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன். எங்களது 4 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும், போலீஸார் வானத்தை நோக்கிச் சுட்டோ, சிறிய தடியடி நடத்தியோ அக்கும்பலை கலைக்கவில்லை. இந்த தாக்குதலில் 2 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. காஷ்மீர் மாநிலம் போல் தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத சக்திகள் செயல்படுகின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. உளவுத்துறை செயல்பாடும் பூஜ்ஜியமாக உள்ளது. காவல்துறையை தன்னிடம் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுபோன்ற தாக்குதலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார். காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. முதல்வர், பயங்கரவாத அமைப்புகளாக செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ, தமுமுக போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும். திமுக வாக்கு வங்கி அரசியலுக்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இஸ்லாமிய மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.
இந்து மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் நான் உள்ளிட்ட பாஜக தலைவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை ஜமாத்தார்கள் ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் எனக்கோ, பாஜக நிர்வாகிகளுக்கோ எந்த ஆபத்து நடந்தாலும் அதற்கு முதல்வர் தான் பொறுப்பு. உளவுத்துறை சரியாக இருந்திருந்தால் நேற்று முன்தினம் இரவு என் மீது நடந்த தாக்குதலை தடுத்திருக்கலாம். மதக்கலவரத்தை ஏற்படுத்த இஸ்லாமிய அடிப்படை வாத சக்திகள் வெளிநாடுகளின் உதவியுடன் செயல்படுகின்றன. சிறுபான்மை மக்களுக்கு ரூ. 5123 கோடி நிதியை பாஜக அரசு ஒதுக்கியுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு இந்த நலத்திட்டங்களை கொண்டு செல்ல இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர் தடையாக உள்ளனர்.” என்றார்.