கரீம்நகர்: தெலங்கானாவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்க்க சென்ற பாஜக எம்பி அரவிந்தை, அப்பகுதியினர் விரட்டிய நிலையில், கான்வாய் வாகனம் மீது கல்வீச்சு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு பாஜக எம்பி அரவிந்த் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது பாஜகவினருக்கும், கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. மேலும் எம்பியின் கான்வாய் வாகனம் மீது கல் வீசப்பட்டதால், அந்த வாகனம் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரவிந்த் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு எதிராக ெதலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் கோழைத்தனமான மற்றொரு தாக்குதலை நடத்தி உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருக்கும் மக்கள் உதவிக்காக அழைப்பு விடுக்கின்றனர். அவ்வாறு அங்கு செல்லும்போது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி நிர்வாகிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகின்றனர்’ என்றார். இதுகுறித்து தெலங்கானா பாஜக தலைவரும், எம்பியுமான பண்டி சஞ்சய் குமார் மற்றும் பிற தலைவர்கள் அரவிந்த் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
