சென்னை: ” சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக 3 நாட்கள் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து உளவுத்துறை உரிய முறையில் காவல்துறைக்கு தகவல் கொடுத்து, அதன்பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற அசாதாரண சூழல் உருவாகியிருக்காது.
எனவே இதற்கு முழுகாரணம் ஸ்டாலின் தலைமையில் இருக்கிற அரசாங்கமும், அவர் கையில் இருக்கிற காவல்துறையும்தான்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: ” கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்த மாணவி, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக செய்திகளில் வந்துள்ளன. ஆனால் மாணவியின் தாயார், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் பள்ளி நிர்வாகம் செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
உயிரிழந்த மாணவி பள்ளி விடுதியிலேயே தங்கி படித்துவந்தார். மாணவி இறந்த செய்தி கேட்டு, மாணவியின் தாய் செல்வி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனது மகள் கடந்த 10-ம் தேதி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால்,13-ம் தேதி மாணவி இறந்துவிட்டதாக, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் 13-ம் தேதிக்கு முன்னதாகவே தனது மகள் இறந்துவிட்டதாக மாணவியின் தாயார் குற்றம்சாட்டுகிறார்.
மாணவி இறந்தபிறகு, பள்ளி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை அல்லது அரசு தரப்பில் மாணவியின் தாயாரை அழைத்து ஆறுதல் கூறவில்லை. மாணவியை துன்புறுத்தியதாக தாயார் கூறுகிறார். எனவே மகளை இழந்த தாய் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். வேதனையுடன் இருந்த அவரை சந்தித்து இந்த அரசாங்கம் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அவ்வாறு நடந்திருந்தால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தால், இந்தநிலை ஏற்பட்டிருக்காது.
தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செயலிழந்துள்ளது. அரசின் அலட்சியத்தால், அந்த தாய்க்கு நீதி கிடைக்காத காரணத்தால் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், இளைஞர்கள் வெகுண்டெழுந்து அந்த பள்ளியில் ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு, தமிழக முதல்வர் ஸ்டாலின்தான்.
இந்த அரசாங்கம் அவரது தலைமையில்தான் இயங்குகிறது. காவல்துறையும் அவரது தலைமையில்தான் இயங்குகிறது. 3 நாட்களாக மாணவி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இவ்வாறான சூழ்நிலை தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. செயலற்ற அரசாங்கம் நடந்துகொண்டிருக்கிறது. உளவுத்துறை செயலற்றுள்ளது.
3 நாட்கள் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து உளவுத்துறை உரிய முறையில் காவல்துறைக்கு தகவல் கொடுத்து, அதன்பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற அசாதாரண சூழல் உருவாகியிருக்காது. எனவே இதற்கு முழுகாரணம் ஸ்டாலின் தலைமையில் இருக்கிற அரசாங்கமும், அவர் கையில் இருக்கிற காவல்துறையும்தான்.
மேலும், இந்த ஆட்சியில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பு கிடையாது என்பதற்கு சாட்சியாக, கடலூரில் பள்ளி மாணவி ஒருவர், 17 வயது மாணவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்” என்று அவர் கூறினார்.