புதுடெல்லி: பிலிப்பைன்ஸ்க்கும் சீனாவுக்கும் இடையே தென் சீன கடல் தொடர்பான பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் தனது ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியில் பிலிப்பைன்ஸ் இறங்கி உள்ளது. தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் வகையில், பிலிப்பைன்ஸ் அரசு இந்தியாவிடம் இருந்து ரூ.2770 கோடி மதிப்பு பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க கடந்த ஜனவரியில் ஒப்பந்தம் செய்தது. . இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து நவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க பிலிப்பைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,‘‘பிலிப்பைன்ஸ் விமான படையில் உள்ள பழைய ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக இந்தியாவின் நவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க அந்த நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக நடந்து வரும் இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதே போல் தேஜாஸ் ரக போர் விமானங்களின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதால் அவற்றை வாங்குவது பற்றியும் அவர்கள் பரிசீலனை செய்யக்கூடும்’’ என்றனர்.
