சென்னை: கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே உயிரிழந்த மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும் உத்தரவை நிறுத்தி வைக்க கோரி மாணவியின் தந்தை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. உத்தரவை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மாணவியின் உடலை தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று காலை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். மேலும், விழுப்புரம், சேலம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தடயவியல் துறை ஓய்வுபெற்ற அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டார். இந்த மறுபிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் மறுபிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பில் குறிப்பிடும் மருத்துவ நிபுணரை நியமிக்க கோரியும், அதுவரை மறுபிரேத பரிசோதனை உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிடக் கோரியும், மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டை தாங்கள் விசாரிக்க முடியாது, உச்ச நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில், மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர், மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் ஆஜராகி, தங்கள் தரப்பில் குறிப்பிடும் மருத்துவரையும் இந்த பிரேத பரிசோதனை குழுவில் சேர்த்து உத்தரவிட வேண்டும். அதுவரையில் மறு பிரேத பரிசோதனை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த தீர்ப்பை மாற்ற முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர் தரப்பில், சிபிசிஐடி அல்லது அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்குமாறு கூறினார். மேலும், ஏற்கெனவே உங்களது தரப்பில் வழக்கறிஞர் ஒருவரை மறுபிரேத பரிசோதனையின்போது அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நான் அளித்த தீர்ப்பில் திருப்தி இல்லையா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அப்போது மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த தீர்ப்பில் தங்களுக்கு திருப்தி இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக முறையீடு செய்யவிருப்பதால், மறு பிரேத பரிசோதனை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி சதீஷ்குமார், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டார்.