வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கையில், மக்கள் போராட்டம் வெடித்ததால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதையடுத்து இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்,க நாடாளுமன்ற வாக்கெடுப்பின்படி நாட்டின் புதிய அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய அரசு தலையிட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இருநாட்டு உறவில் சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து, தற்போது இந்திய தூதரகம் இது தொடர்பாக விளக்கமளிக்கிறது.
இலங்கை அரசியலமைப்பின் சரத்துகளுக்கு அமைவாக இலங்கை பாராளுமன்றம் மேன்மைதங்கிய ரணில் விக்கிரமசிங்க அவர்களை இலங்கை ஜனாதிபதியாக இன்றைய தினம் தெரிவு செய்துள்ளது.
— India in Sri Lanka (@IndiainSL) July 20, 2022
இது குறித்து இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை அதிபர் தேர்தல் விவகாரத்தில் இந்தியா தலையிட்டதாகக் கூறப்படுவது ஆதாரமற்றது. மேலும் இது ஊகங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்களில் வெளியான இந்தத் தகவலை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். இது தொடர்பான செய்திகள் அனைத்தும் கற்பனையானவை. இன்னொரு நாட்டின் உள்விவகாரங்கள், ஜனநாயக நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம்” என்று பதிவிடப்பட்டிருக்கிறது.