புதுடெல்லி: ‘நாடாளுமன்றத்தில் தினமும் அமளி ஏற்படுத்தி அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பது சரி அல்ல,’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரான மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் நடந்து வருகிறது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் இதுவரை முக்கிய விஷயங்கள் குறித்த விவாதம் எதுவும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பி.யுமான மணீஷ் திவாரி, இதுபோன்ற அமளியில் ஈடுபடுவதற்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது ஒன்றிய அரசின் கடமை. அடிக்கடி அவை ஒத்திவைக்கப்படுவதற்கு காங்கிரஸ் மீது குற்றம் சுமத்துவது துரதிர்ஷ்டவசமானது; சந்தர்ப்பவாதமும் கூட. ஏனென்றால், 2004-2014ம் ஆண்டு காலக்கட்டத்தில் பாஜ.வும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கின. மாலை 6 மணிக்கு பிறகு அரசின் அலுவல்கள் முடிந்தவுடன் மக்களவை விதி எண் 193ன் கீழ் எதிர்க்கட்சிகள் கூறும் எந்த ஒரு விஷயத்தையும் பற்றி அவையில் விவாதம் நடத்தலாம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நான் தெரிவித்தேன். இதன்படி, நாடாளுமன்ற அலுவல் தினத்தன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விவாதம் நடத்தலாம். அதே போன்று மாநிலங்களவையிலும் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம், அரசின் அலுவல்கள் எந்தவித இடையூறு இல்லாமல் நடைபெறும். மிகவும் மோசமான நிலையில்தான் அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டும். ஆனால், அதையே தினமும் ஒரு தொழிலாக வைத்திருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
