புதுடெல்லி: கடந்த மே மாதம் குரங்கு அம்மைநோய் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரவியது. இந்தியாவில் கேரளாவில் இதுவரை 3 பேருக்கு குரங்கு அம்மைநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் 34 வயதுள்ள ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை புணே ஆய்வகத்தில்பரிசோதித்தபோது, குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இவர் வெளி நாட்டுபயணம் எதுவும் மேற் கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, மத்திய அரசின் உயர் நிலைக்குழு கூட்டம் நேற்றுநடைபெற்றது. சுகாதார அறிவியல்துறை இயக்குநர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுகாதாரத் துறை, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஐசிஎம்ஆர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில், குரங்கு அம்மை நோய் பரவுவதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.