மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ஒவ்வொரு மாதமும் திணறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்திலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் காமராஜர் பல்கலைக்கழகமும் ஒன்று. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு முதுநிலை வகுப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர். இப்பல்லையில்,160-க்கும் மேற்பட்ட உதவி, இணை, பேராசிரியர்களும், 280-க்கும் மேற்பட்ட அலுவலர்களும் மற்றும் 300-க்கும் மேலான தற்காலிக பணியாளர்களும் பணிபுகின்றனர்.
இவர்கள் தவிர, ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை மட்டுமே 400-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் சம்பளம், ஓய்வூதியத்திற்கென சுமார் ரூ.10 கோடி வரை தேவை இருக்கிறது. இது தவிர, அடிப்படை வசதி மேம்பாடு உள்ளிட்ட பிற தேவைக்களுக்கான செலவினங்களும் உள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் பல்கலை நிர்வாகத்திற்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை நிதித் தேவை உள்ளது.
இந்நிலையில், கரோனா உள்ளிட்ட சில காரணத்தால் கடந்த சில மாதத்திற்கு மேலாக பல்கலைக்கழகம் தொடர்ந்து நிதி நெருக்கடி சந்தித்து வருகிறது. இதன் காரணமாக 136 ஒப்பந்த பணியாளர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், பல்கலைக்கு தொடர்ந்து போதிய நிதி வருவாயின்றி ஒவ்வொரு மாதமும் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் திணறும் சூழல் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் 31ம் தேதி அல்லது 1-ம்தேதிக்குள் சம்பளம் கிடைத்துவிடும். இன்று (ஆக.,2) வரை சம்பளம் வராததால் சிரமத்தை சந்திப்பதாக பல்கலை. பேராசிரியர்கள், அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பல்கலை. அலுவலர்கள் சிலர் கூறுகையில், ”ஏற்கெனவே கரோனா காலத்திலே நிதிநெருக்கடி தொடங்கி விட்டது. வேறு வழியின்றி பல்கலையில் ஓய்வூதியர்களுக்கான இருப்பு (கார்பஸ் பண்ட்) உள்ளிட்ட இருப்புத் தொகையை சம்பளம் உள்ளிட்ட பிற வகையில் செலவிட்டனர். தற்போது, புதிய ஓய்வூதியத்திட்டத்திற்கான (சிபிஎஸ்) இருப்புத் தொகையும் செலவான நிலையில், மேலும் நிதி நெருக்கடி பல்கலை நிர்வாகம் சந்திக்கிறது. ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை உரிய நேரத்தில் பெற முடியாமல், நாங்களும் நிதி நெருக்கடியை சந்திக்கிறோம். வருவாயை பெருக்க, துணைவேந்தர் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்” என்றனர்.
துணைவேந்தர் ஜெ.குமார் கூறுகையில், ”பல்கலைக்கு தேவையான நிதி ஆதாரங்களை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலை நிலைக் கல்வி நிர்வாகம் சார்பில், வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அது தொடர்பாக கூட, இன்று ஆய்வு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. தொடர்ந்து முயற்சி எடுக்கிறோம்” என்றார்.