சென்னை: வீட்டுவசதி மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தொழில்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினர் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான வீட்டுவசதி தீர்வுகளை வாரியம் வழங்குகிறது. தற்போது உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக மற்றும் அலுவலக கட்டிடங்கள், மறு கட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, திருச்சி சாத்தனூர், மதுரை மாவட்டம் தோப்பூர், உச்சப்பட்டி ஆகிய இடங்களில் ரூ.26.31 கோடி மதிப்பில், வீட்டுவசதி வாரியத்தின் புதிய கோட்ட அலுவலகக் கட்டிடம், பிரிவு அலுவலக வளாகம், துணைக்கோள் நகர கோட்ட அலுவலக கட்டிடம், விருந்தினர் மாளிகை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக நேற்று திறந்துவைத்தார்.
போக்குவரத்துத் துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு ரூ.1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு, ரூ.3 கோடியே 72 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்கள், பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, பழகுநர், ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, எஸ்.எஸ்.சிவசங்கர்,பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி,வீட்டுவசதித் துறை செயலர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா, போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.