திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழைக்கு இதுவரை 18 பேர் பலியாகினர். அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் நிலை அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதுவரை கேரளாவில் கனமழைக்கு 18 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சாலைகள் பல அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “கேரளாவில் வெள்ள பாதிப்பு உள்ள இடங்களிலிருந்து இதுவரை 5,168 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 178 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையினால் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுபோல தாழ்வானப் பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.