புதுடெல்லி: ‘மாநில அரசுகளை கொல்லும் சீரியல் கொலைகாரனாக பாஜ செயல்படுகிறது,’ என்று கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்காக, இக்கட்சி எம்எல்ஏ.க்களுக்கு பாஜ தலா ரூ.20 கோடி பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. பாஜ.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி பற்றி விவாதிப்பதற்காக, டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய கெஜ்ரிவால்:
‘ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், இதுவரையில் கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம், மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா உட்பட பல்வேறு மாநில அரசுகளை கவிழ்த்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இது மொத்தம் 277 எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி இருக்கிறது. இதற்காக ரூ.5,500 கோடி செலவிட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளை அடுத்தடுத்து படுகொலை செய்யும் சீரியல் கொலைகாரனாக பாஜ செயல்படுகிறது,’ என ஆவேசமாக பேசினார்.
பாஜ.வை அம்பலபடுத்த நம்பிக்கை வாக்கெடுப்பு
டெல்லி அரசை கவிழ்க்கும் பாஜ.வின் ஆபரேஷன் தாமரை திட்டம் தோல்வி அடைந்து விட்டது என்பதை நாட்டுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக, வரும் திங்கட்கிழமை தாமாக முன் வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு போவதாக முதல்வர் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.