புதுடெல்லி: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று கோரினார். இந்த மனு நீதிபதிகள் ஷா, கிருஷ்ண முராரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஒரு மொழிக்கு தேசிய அந்தஸ்து வழங்க வேண்டியது என்பது, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய கொள்கை முடிவு. இதற்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. இதற்காக நாடாளுமன்றத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப முடியாது. இந்தியாவில் எத்தனை நகரங்களில் சமஸ்கிருதம் பேசப்படுகிறது? சமஸ்கிருதத்தில் ஒரு வரியை பாராயணம் செய்ய முடியுமா? அல்லது உங்களின் ரிட் மனுவின் கோரிக்கையை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க முடியுமா? இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. மனு நிராகரிக்கப்படுகிறது,’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.