கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஊராட்சியில் 12 வார்டுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் தாலுகா அலுவலகம், காவல் நிலையம், காவலர் குடியிருப்பு, பொதுவுடைமை வங்கி, மின்சார வாரியம், கூட்டுறவு வங்கிகள், துணை அஞ்சலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ளன.
மேலும் வணிக வளாகங்கள், வாரச்சந்தைகள் மற்றும் கண்டாச்சிபுரத்திலிருந்து விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, பெங்களூர், திருப்பதி மற்றும் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பெரிய நகரங்களுக்கு நாள் முழுவதும் நேரடி பேருந்து வசதிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் தாலுகா தலைநகரமான கண்டாச்சிபுரத்துக்கு தினந்தோறும் கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அடிப்படை தேவைகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக கண்டாச்சிபுரம் நகருக்கு வந்து செல்கின்றனர்.
கண்டாச்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கு செல்லும் ஓடைகள், கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வருடந்தோறும் நவம்பர், டிசம்பர் மாதம் பெய்யும் பருவமழையால் கண்டாச்சிபுரத்தில் உள்ள முக்கியமான சாலைகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மழைநீர் தேங்கி சாதாரண மழை நேரங்களிலேயே சேறும், சகதியுமான சாலைகளை பொதுமக்கள் பெரும் சிரமத்துடன் கடந்து வந்தனர். மேலும் தூர்வாரப்படாத ஓடைகளில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அவலநிலை நீடித்து வந்தது.
இந்நிலையில் கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி ரவிக்குமார் இப்பகுதிகளை பார்வையிட்டு, வரும் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் காரணந்தல் ஏரியில் இருந்து ஓட்டேரிக்கு செல்லும் ஓடை, ஓட்டேரியில் இருந்து வெளியேறும் கோடி கால்வாய் மற்றும் திருக்கோவிலூர் பிரதான சாலையில் உள்ள கால்வாய் மற்றும் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி கால்வாய்களில் இருந்து வெளியேறும் இடங்களையும் தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதனால் தற்போது ஒரு வாரமாக பெய்த கனமழையில் சாலைகளிலும், ஓடைகளிலும் மழைநீர் குட்டை போல் தேங்காமல், ஏரியில் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் ஊராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.