புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் அகண்ட பாரதத்தின் (ஐக்கிய இந்தியா) முதல் பிரதமர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா மற்றும் ‘கடமைப்பாதை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட டெல்லி ராஜபாதையை தொடங்கி வைத்தார். அதிகாரத்தின் குறியீடாக இருந்த முந்தைய ராஜபாதை கடமைப் பாதையாக மாறுவது பொதுமக்களின் உடைமை மற்றும் அதிகாரத்திற்கான உதாரணத்தை அடையாளப்படுத்துகிறது. இந்த நிகழ்வின் போது இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார். அமிர்தகாலத்தில் புதிய இந்தியாவுக்கான பிரதமரின் 2-வது உறுதிமொழியான ‘காலனிய மனநிலையின் அனைத்து அடையாளத்தையும் அகற்றுதல்’என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் ராஜபாதையும் அதன் அருகே உள்ள பகுதிகளும் போக்குவரத்து அதிகரிப்பும் அதன் அடிப்படை கட்டமைப்பும் அங்கு பயணம் செய்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தின. பொதுக்கழிப்பறைகள், குடிநீர், அமருமிடங்கள், போதிய அளவு வாகனம் நிறுத்தும் இடம் போன்ற அடிப்படை வசதி குறைபாடு இருந்தது. மேலும் போக்குவரத்தை முறைப்படுத்தும் குறியீடுகள் போதாமை, தண்ணீர் வசதியில் மோசமான பராமரிப்பு, இடையூறுகளை ஏற்படுத்தும் வாகன நிறுத்துமிடம் என்ற பிரச்சினைகள் இருந்தன.
குடியரசு தின அணிவகுப்பு மற்றும் இதர தேசிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யும் போது பொதுமக்கள் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவையும் இருந்தது. இத்தகைய பிரச்சினைகளை மனதில் கொண்டும் கலைஅம்சத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்ச்சியை உறுதிசெய்யவும் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த வரலாற்று தருணத்தை காணும் அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜபாதை என்றும் அழைக்கப்படும் கிங்ஸ் வழி அடிமைத்தனத்தின் அடையாளமாக இருந்தது. அது இப்போது கடந்த காலமாகிவிட்டது. மேலும், ‘கடமைப்பாதை’ வடிவில் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. சுதந்திரத்தின் 75வது ஆண்டான அமிர்தகாலத்தில் அடிமைத்தனத்தின் மற்றுமொரு சின்னத்தை அகற்றியதற்காக அனைத்து நாட்டு மக்களையும் நான் வாழ்த்துகிறேன்.
இன்று, இந்தியா கேட் அருகே நமது தேசியத்தின் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலையும் நிறுவப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் முடியாட்சியின் போது அவர்களின் பிரதிநிதியின் சிலை இங்கே இருந்தது. இன்று, அதே இடத்தில் நேதாஜியின் சிலையை நிறுவுவதன் மூலம் நாடு நவீன, வலிமையான இந்தியாவை நிறுவியுள்ளது. சுபாஷ் சந்திரபோஸ் பதவி மற்றும் சவாலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த மனிதர். அவருக்கு தைரியமும் சுயமரியாதையும் இருந்தது. அவருக்கு யோசனைகளும் தொலைநோக்கு பார்வையும் இருந்தது. அவருக்கு தலைமைத்துவ திறன் மற்றும் கொள்கைகள் இருந்தன.
நேதாஜியின் வழியை நாடு பின்பற்றியிருந்தால் இந்தியா இன்னும் வளர்ச்சி அடைந்திருக்கும். நேதாஜியின் பாரம்பரியம் மற்றும் சித்தாந்தங்களை தேசம் மறந்துவிட்டது. கடந்த எட்டு ஆண்டுகளில், நேதாஜியின் இலட்சியங்கள் மற்றும் கனவுகளின் முத்திரையைக் கொண்ட இதுபோன்ற பல முடிவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நாங்கள் எடுத்துள்ளோம். நேதாஜி சுபாஷ் அகண்ட பாரதத்தின் (ஐக்கிய இந்தியா) முதல் பிரதமர் ஆவார், அவர் 1947 க்கு முன்பே அந்தமானை விடுவித்து மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்த நூற்றுக்கணக்கான சட்டங்களை இன்று நாடு மாற்றியுள்ளது. பல தசாப்தங்களாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் நேரத்தைப் பின்பற்றி வந்த இந்திய பட்ஜெட்டின் நேரமும் தேதியும் மாறிவிட்டது. தேசிய கல்விக் கொள்கையின் மூலம், இப்போது நாட்டின் இளைஞர்கள் அந்நிய மொழியின் நிர்ப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
ராஜபாதையின் யோசனையும் வடிவமைப்பும் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருந்தது. இன்று நாம் அதன் கட்டிடக்கலை மற்றும் ஆன்மா இரண்டையும் மாற்றியுள்ளோம். இங்கு வந்து தேசிய போர் நினைவுச்சின்னம் மற்றும் நேதாஜியின் சிலை மற்றும் கடமைப்பாதை ஆகியவற்றை பார்க்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் இது ஊக்கமளிக்கும். கடமைப்பாதை என்பது என்பது வெறும் செங்கற்கள் மற்றும் கற்களின் பாதை அல்ல. இதுவே இந்திய ஜனநாயகத்தின் கடந்த கால மற்றும் எல்லா கால இலட்சியங்களுக்குமான வாழும் பாதையாகும்” என்று பேசினார்.