சேந்தமங்கலம்: படிக்கும் போதே ரகசிய திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததால், விரக்தியடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சண்முகம், விவசாயி. இவரது மகன் விமல்குமார்(20), நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் தர்மபுரியை சேர்ந்த மாணவியும், விமல்குமாரும் காதலித்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல், விமல்குமார் காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின்னர், நாமக்கல்லில் உள்ள தனது தாத்தா வீட்டில், காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இதனிடையே, அவரது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது விமல்குமாருக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த விமல்குமார், மனைவியிடம் இதுபற்றி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியேறிய அவரது மனைவி, கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த விமல்குமார், போடிநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டில், நேற்று முன்தினம் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.