ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இலங்கை

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் பனுகா ராஜபக்சா, ஹசரங்கா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அணியின் ஸ்கோர் 116 ரன்னாக இருந்த போது ஹசரங்கா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடியா பனுகா ராஜபக்ச அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் பனுகா ராஜபக்ச 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிப் ரவுப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார்.

இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.