வாஷிங்டன்,
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், அந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவானது.
இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்துள்ளதாக டிரம்ப் கூறி வந்த நிலையில், தனது ஆதரவாளர்களிடையே வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்களை பரப்பியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த அந்தோனி ராபர்ட் வில்லியம்சுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.