சென்னை: புறநகர் பகுதிகளில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்கப் பள்ளி, 92 நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 291 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல்வேறு பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் முறையாக இல்லை. குறிப்பாக, கரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் பல மாதங்கள் செயல்படாமல் இருந்தன. இதன் காரணமாக கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
சென்னையின் மையப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குடிநீர் உள்ளிட்ட சுகாதார வசதிகள் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும், புறநகர் பகுதிகளில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதன்படி திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள மொத்தம் 63 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல பள்ளிகளில் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.
கழிவறை: இந்தப் பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் 40 முதல் 60 வரை சதவீத கழிவறைகள்தான் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. மாற்றத் திறனாளிகள் படிக்கும் 4 பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கழிவறைகள் இல்லை. 30 சதவீத பள்ளிகளில் கூடுதல் கழிவறைகள் கட்ட இட வசதிகள் இல்லாமல் உள்ளது.
கை கழுவும் வசதி: 85 சதவீத பள்ளிகளில் வெளியிலும், 85 சதவீத பள்ளிகளில் உள்ளேயும் கை கழுவும் வசதி உள்ளது. கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காரணத்தால் இந்த வசதிகள் அனைத்து சேதம் அடைந்துள்ளன. சோப் அல்லது கை கழுவும் திரவங்கள் ஒரு இடத்தில் கூட இல்லை.
குடிநீர்: 90 சதவீத பள்ளிகளில் சுத்திகரிப்பு (ஆர்ஓ) செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் வசதி உள்ளது. இதற்கு குடிநீர் வாரியம் அல்லது போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றில் 30 முதல் 40 சதவீத பள்ளிகளில் சுத்திகரிப்பு வசதிகள் செயல்படாமல் உள்ளது.
சுகாதார மேலாண்மை: பள்ளிகளில் குப்பை சேகரிப்பதற்கான குப்பைத் தொட்டிகள் இல்லை. மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் மூலம் குப்பைகள் அகற்றப்படுகிறது. மாதவிட கால சுகாதார சேவைகளுக்கான தனி அறைகள் எந்தப் பள்ளியிலும் இல்லை. 40 சதவீத பள்ளிகள் மட்டுமே நாப்கின் இன்சினரேட்டர் உள்ளன. இவற்றில் பல செயல்படாமல் உள்ளன.