சென்னை, பள்ளிக்கரணை பகுதியிலுள்ள அம்பேத்கர் சாலையில் இரண்டு தரப்பினர் ஆயுதங்களுடன் சண்டையிட்டுக் கொள்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்து பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்தப் பகுதியிலிருந்த புதர் ஒன்றில் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆல்வின்(எ)பிரைட் என்பவர் உடலில் பல வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தார். அவர் சடலம் அருகில் அவரின் நண்பர் பெருமாள் என்பவர் கை, கால் பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார்.
காவல்துறையினர் பெருமாளை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஆல்வினுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சூரைமணி என்பவருக்கும் கஞ்சா விற்பதில் மோதல் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு பிரிவினருக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. போலீஸார் தப்பிச் சென்ற கொலையாளிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.