டில்லி: சுற்றுலா பயணியர் வருகையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. தமிழகம் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் முதலிடத்தையும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தையும் பெற்று உள்ளது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ‘இந்திய சுற்றுலா புள்ளி விபரம் – 2022’ என்ற 280 பக்க அறிக்கையை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் , நடப்பாண்டில் (2022) உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கை 15 கோடி பேரை ஈர்த்துள்ளது என்றும் அதிகபட்ச சுற்றுலா பயணிகளை ஈர்த்ததில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2வது இடத்தை உ.பி. பிடித்துள்ளது.
அதுபோல, வெளிநாட்டு சுற்றுலா பயணியரை அதிகளவில் ஈர்த்துள்ளதில், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இந்த ஆண்டு இதுவரை 12.6 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், தமிழ்நாடு 12.3 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் 2வது இடத்தையும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் மாமல்லபுரத்தை, வெளிநாட்டு பயணியர் அதிகம் பேர் ரசித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 1.4 லட்சம் பேர் வந்து ரசித்துவிட்ட சென்றுள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹாலை, 2021 – 2022ல் உள்நாட்டு சுற்றுலா பயணியர் 30 லட்சம் பேரும், வெளிநாட்டு பயணியர் 38 ஆயிரம் பேரும் பார்த்து ரசித்துள்ளனர்.
உள்நாட்டு பயணியரின் விருப்பத்தில் டில்லியில் உள்ள செங்கோட்டை, குதுப்மினார் ஆகியவையும் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் 3,693 பாரம்பரிய இடங்கள், தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டும் சுற்றுலா பயணிகளை ஈர்த்ததில் தமிழகஅரசு முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.