குடும்பத்தினரை தாக்கியதாக சிறப்பு எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு: பல பெண்களுடன் தொடர்பு காரணமா?

ஓமலூர் அருகே தொளசம்பட்டி காவல் நிலையம் அருகில் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவி மற்றும் மகன்களை கொடுமைப்படுத்தியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள அமரகுந்தி பகுதியை சேர்ந்தவர் 50 வயதான கோவிந்தராஜ். இவர் தற்போது சேலம் அருகேயுள்ள மல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
image
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடிபோதையில் தனது வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகனை தாக்கியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த இருசக்கர வாகனம், கார், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. மேலும், மனைவியையும் அடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அவரது மனைவி லதா தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
image
இந்த புகாரின் பேரில் தொளசம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கோவிந்தராஜ் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் போது அந்தந்த காவல் நிலையத்திற்கு அருகில் ஒரு வீடு எடுத்து தங்கியதும் அப்போதெல்லாம் பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வராமலேயே இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
image
கணவன் மனைவிக்கு இடையே இதன் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அமரகுந்தியில் உள்ள வீட்டுக்கு வந்த கோவிந்தராஜிடம் அவரது மனைவி லதா, “மகன்கள் வளர்ந்து விட்ட பின்னரும் இப்படி நடந்து கொள்ள வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து தனது மனைவியையும் மகனையும் தாக்கிய கோவிந்தராஜ் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
image
இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மீது தகாத வார்த்தையால் திட்டுவது, சொத்துகளை சேதப்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது என மூன்று சட்ட பிரிவுகளின் கீழ் தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.