மதுரை: திருக்கடையூர் கோயில் பெயரில் தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வர் கோயில் உள்ளது. இங்கு 60ம் கல்யாணம், உக்ர ரத சாந்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடக்கும். தனியார் பலர் திருக்கடையூர் கோயில் என்ற பெயரில் இணையதளங்களை வைத்துள்ளனர். பூஜை மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் ரூ.2 ஆயிரம் மட்டும் வசூலிக்கும் நிலையில், தனியார் இணையதளங்களில் ரூ.4 லட்சம் வரையில் பணம் வசூலிக்கின்றனர். கோயிலின் பெயரில் செயல்படும் தனியார் இணையதளங்களை முடக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், ‘‘கோயிலின் பெயரில் தனிநபர்கள் எப்படி இணையதளம் நடத்த முடியும்? இது தவறான செயல். இந்த இணையதளங்களை முடக்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கலாமே? மக்களின் உணர்வை வியாபாரமாக பார்க்கக் கூடாது’’ என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.
