கொப்பல்: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக கொப்பம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கொப்பல் மாவட்டத்தில் விடாது கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகளை அடித்து சென்றுவிட்டது. தாம்பூர் அருகே கட்டப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதையும் மழைநீர் வியாபித்திருக்கிறது. சாலைகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதால் லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சிக்கி வருகின்றன.
இந்நிலையில் கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கலாபுர்கி, யாத்புரி, கொப்பல், குடகு, வல்லாரி, சித்ரதுர்கா, சிக்கமங்களூரு, சிக்கபள்ளாபூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்திலும் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால், பெருக்கெடுத்த வெள்ளம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது. சுமார் 4 அடிக்கு தேங்கி நிற்கும் மழைநீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கிவிட்டன. பருவம் கடந்து பெய்து வரும் மழையால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுவட்டார விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.