கைமாறும் கொடநாடு வழக்கின் ஆவணங்கள்; சிபிசிஐடி போட்ட பக்கா பிளான்!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணி, சசிகலா தலைமையில் மற்றொரு அணி என பிரிந்த சூழலில் கட்சியில் அடுத்தடுத்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு அதிமுகவிற்கு பெரிய தலைவலியாய் முன்வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த விவகாரத்தில் கட்சியினர் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் ஒட்டுமொத்த விசாரணையும் முடிவடைந்த பின்னரே குற்றவாளிகள் யார் என்று தெரியவரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த சில மாதங்களில் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இதில் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழக்க, மேலும் சிலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதற்கிடையில் வழக்கு விசாரணையில் சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஸம்ஷீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்கிற பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. மொத்தம் 314 பேரிடம் விசாரணை நடத்தி 1,500 பக்கங்களுக்கு மேல் கொண்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ல் அமைந்ததை அடுத்து, கொடநாடு வழக்கு விசாரணை வேகமெடுத்தது. மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர் தலைமையில் 5 சிறப்பு போலீஸ் படையினர் விசாரணை செய்து வந்தனர். இது எதிர் தரப்பின் முக்கியத் தலைவர்கள் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கொடநாடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பான ஆவணங்கள் தற்போது ஊட்டியில் இருக்கின்றன. இதனை விரைவாக சிபிசிஐடி போலீசார் கைகளில் ஒப்படைக்க வேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை கூடுதல் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஊட்டி செசன்ஸ் கோர்ட் நீதிபதி முருகனிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து ஆவணங்கள் அனைத்தும் சென்னை கொண்டு வரப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிபிசிஐடி போலீசாரின் கைகளில் ஆவணங்கள் கிடைத்தவுடன் அடுத்தகட்ட விசாரணை வேகமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. சிபிசிஐடி உரிய விசாரணை நடத்தி புதிதாக அறிக்கை ஒன்றை தயார் செய்யும். அதில் இடம்பெறப் போகும் குற்றவாளிகளின் பட்டியலே இறுதியானது எனத் தெரிகிறது. அதில் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.