வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான வழக்கு-பதிலளிக்க 2 வாரம் அவகாசம் கோரிய மத்திய அரசு

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 அரசியலமைப்பு அங்கீகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்க இரண்டு வார காலம் அவகாசம் கோரியது மத்திய அரசு. அக்டோபர் 31ம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் 1991ம் ஆண்டு மத வழிபாட்டு தளங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத்தலங்களின் மீது யாரும் உரிமை கோர முடியாது என அறிவிக்கப்பட்டது.
இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மத வழிபாட்டு தலங்களை மீட்பதை இந்த சட்டம் தடுக்கிறது குறிப்பாக இந்து ஜெயின் பௌத்தம் மற்றும் சீக்கிய மதத்தினருக்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என கூறி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உப்பாத்தியா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
மேலும், முகலாயர்கள் ஆட்சி காலத்தில் ஏராளமான வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு மசூதிகளாக கட்டப்பட்டன. எனவே அவற்றை மீட்பதற்கு இந்த சட்டம் தடையாக இருக்கிறது என்றும் மதுரா உள்ளிட்ட பல இடங்களில் இஸ்லாமியர்கள் வசம் உள்ள இடங்கள் இந்து கோயில்களுக்கு சொந்தமானது அவற்றை மீட்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த மனுக்கள் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே இருந்தது.
image
இந்த வழக்கு செப் 9ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்குகளை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் வழக்கின் விசாரணை அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்தார்.
மத்திய அரசின் விவகாரத்தில் இன்னும் பதிலளிக்காமல் இருக்கக்கூடிய சூழலில் பதில் அளிப்பதற்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்குவதாகவும் காசிநகரின் அரச குடும்பம் மற்றும் ஜமாத் உலமா இ ஹிந்த் அழைப்பு ஆகியவை இடை மனுதாரர்களாக தங்களை இணைத்துக் கொள்ளவும் நீதிபதி அறிவித்தார்.
ஏற்கனவே, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மத ரீதியிலான சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த வழக்கின் விசாரணை மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு மீது பதிலளிக்க இரண்டு வார காலம் மத்திய அரசு அவகாசம் கோரியது. இதனையடுத்து அக்டோபர் 31ம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கு நவம்பர் 14 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.