இலவசங்கள் அறிவிப்பு வழக்கு: அவசர மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பு குறித்து கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இம்மனுவை ெதாடர்ந்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கண்காணிப்பு குழு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரித்து வரும் நிலையில், வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் இன்று புதியதாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களில் இன்று மாலை சட்டப் பேரவை தேர்தல் நடத்துவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிடுகிறது. எனவே இலவச அறிவிப்புகள் தொடர்பான வழக்கை உடனே நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ எனக் கோரினார். நீதிபதி அளித்த உத்தரவில், ‘தேர்தல் ஆணையம் அவர்களுக்கான பணிகளை ெசய்து வருகின்றனர். நாங்கள் எங்களது பணிகளை செய்து வருகிறோம். உங்கள் அவசரத்திற்கு இம்மனுவை விசாரிக்க முடியாது’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.