வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
‘ரெண்டு நாளா இழுத்துக்கிட்டு கிடக்கு. தூக்கம் போனது தான் மிச்சம்…’ என்றாள் தங்கம்.
‘உம்ம்…ஹூம். இப்போ போற மாதிரி தெரியலே…’ என்றாள் ரத்தினம்.
‘இன்னும் பெரியக்கா மட்டும் தான வர வேண்டியது இருக்கு…’ – இது முருகன்.
‘ஆமாம் ஆமாம்…’ என்றபடி அலுத்துக் கொண்டனர் தங்கமும் ரத்தினமும்.
‘பக்கத்து ஊருலே இருந்து கிளம்பி வர வலிக்குதாக்கும்…இத்தனைக்கும் மூத்தது வேற…’
‘நான் போட்டது போட்டபடி அப்படியே ஓடியாந்தேன்…’
‘நான் மட்டுமென்ன? சின்னவன் சாப்பிட்டானானு கூடத் தெரியல…’
வீட்டின் நடுவில் பெரியவரைக் கிடத்திவிட்டு, மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர் மூவரும்.
‘அப்பா…அங்க பாருங்க. தாத்தா வாய தொறக்கராரு…’
‘அந்த சோடாவ வாயில ஊத்து…’ என்றான் முருகன்.
‘போப்பா…நா மாட்டேன்…அக்காவ ஊத்த சொல்லு…நேத்துல இருந்து நான் தான ஊத்தறேன்…’
‘ஹாஸ்பிட்டல் தூக்கிட்டுப் போலாமா?’ என்றபடி உள்ளே நுழைந்தாள் மரகதம்.
‘வாடியம்மா…பக்கத்து ஊருல இருந்து வர இம்புட்டு நேரமா?’ என்றாள் தங்கம்.
மரகதம் பதிலேதும் பேசவில்லை.
‘பக்கத்து வீடு சேகரு மவன் டாக்டருக்கு தான் படிக்கறான். பாத்துட்டு இனிமே தேராதுனு சொல்லிட்டான்…’
‘இருந்தாலும்…’
‘அக்கா…நீ செத்த கம்முனு இரு. எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும். இத்தன நாளா நான் தானா வச்சு பாத்துட்டு இருந்தேன்…?’ என்றபடி மரகதத்தைப் பார்த்து முறைத்தான் முருகன்.
தங்கம் மெல்ல ஆரம்பித்தாள்.
‘அப்புறம் என்னடா முருகா…மரகதமும் வந்துட்டா…பேச வேண்டியத பேசிடு…’
‘நீ செத்தப் பொறு…அப்பா நல்லபடியா போய் சேரட்டும்! மாமாக்கள் லாம் வரட்டும்…பிறகு பேசிப்போம்…’ இருந்தாலும் தங்கம் அடங்கவில்லை.

‘என்னத்த அப்புறம் பேசப் போற? வீரங்கோயிலு பக்கத்துல உள்ள நிலத்தத் தவிர வேற என்ன சம்பாரிச்சு வச்சுருக்கான் நம்ம அப்பன்…’
பெரியவர் பலமாக இரும்பினார். இரு கைகளும் இறுக்கமானது. கால்கள் நடுங்கின.
எல்லோரும் ஒருமுறை அவரைப் பார்த்து, பிறகு திரும்பிக் கொண்டனர்.
‘அடியே… இப்ப இது ரொம்ப முக்கியமாக்கும்…? அப்பன் சாகக்கிடக்கான்…நீ கண்டத பேசிட்டு இருக்க…’ என்றாள் மரகதம்.
‘இப்ப பேசாம வேற எப்ப பேசுறது? நான் நேராவே கேட்டு புறேன். இந்த பயலுக்கு (முருகனைக் காண்பித்து) இந்த வூடு இருக்கு. உன் புருசனுக்கு ரைஸ் மில்லு வேல இருக்கு. ரத்தினம் மூணு ஆம்பள புள்ளைங்கள பெத்து வச்சுருக்கா. எனக்கு தான் யாரும் இல்ல. புருசனும் புட்டுக்கிட்டான். புள்ளையும் மூளையில சீக்கு வந்துக் கிடக்கு…’
‘கொடக்க்க்க்… டக்க்க்க்…’ என சத்தம் கேட்டது.
பெரியவரின் வாயில் முட்டை முட்டையாக கொப்பளித்துக் கொண்டிருந்தது உமிழ் நீர்.
‘டேய்…தாத்தா வாய தொடச்சு விட்டுட்டு அந்த சோடாவ ஊத்து…’
‘அம்மா போயி சேரும்போதும் நீ இதே கதைய சொல்லி தான் அவங்க நகை பூராத்தையும் வாங்கிக்கிட்ட… நாங்க அதுல இருந்து ஒரு குண்டுமணி எடுத்தோமா? இப்ப அந்த நிலத்துக்கு அடி போடுறயாக்கும்…?’
ரத்தினம் படபட வென பேசியது தங்கத்துக்கே ஆச்சரியமாக இருந்தது.
ரத்தினம் சொல்வது ‘சரி தான்…’ என்பதைப் போல தலை அசைத்தாள் மரகதம்.
இப்போது பெரியவரின் மூச்சு வேகம், அதிகமாகி அதிகமாகி பின்பு குறைந்தது.
அதுவரை அமைதியாக இருந்த முருகன் பொறுமை இழந்து, ‘இப்ப யாரு அந்த நிலத்த உங்களுக்குக் கொடுக்கப்போறதா சொன்னது? நீங்க யாராவது ஒத்த பைசா இந்தாளுக்காக செலவு பண்ணிங்களா? அந்த நிலத்த என் பையன் படிப்புக்காக வச்சுருக்கேன். அதுல யாருக்கும் பங்கு இல்ல…’ என்றான்.
‘நல்ல நியாயம்டா முருகா…உம்பையன் என்ன கலெக்டருக்கா படிக்கறான்? அஞ்சாங்கிளாஸ் கூட இன்னும் போகலே…’ என்றாள் தங்கம்.
‘அது எனக்குத் தெரியும். எம்பையன் தான் இனிமே எனக்கு. அவன டாக்டராவோ வக்கீலாவோ ஆக்கனும். அதுக்கு அந்த நிலம் தேவை…’
‘எனக்கு மட்டும் புள்ளைங்க இல்லையா? ஒன்னுக்கு மூனு பெத்து வச்சுருக்கேன்…’ குறுக்கே பாய்ந்தாள் ரத்தினம்.
……
……
நான்கு பேருக்கும் சண்டை முட்டிக் கொண்டது.
மாறி மாறி சொற்கள் வந்து விழுந்தன.
திடீரெனப் பெரியவரின் தலை, மேலும் கீழும் ஆடியது. கண்கள் சுருங்கின. கைகள் கீழே விழுந்தது. கால்கள் ஓய்ந்தன.
கடைசியாக ஒரு பெரிய மூச்சு ஒன்றை வேகமாக எடுத்து சட்டென கீழே சரிந்தார். கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த உயிரும் பிரிந்தது.
எல்லாரும் அமைதியானார்கள்.
நிசப்தம்…
குண்டூசி கீழே விழுந்தால் கூட தெளிவாகக் கேட்கும் நிசப்தம்.
‘டேய்…ஏதுடா இந்த ஆரஞ்சு கலர் சோடா…’
‘இதுவா…? எங்கப்பா அவரு அப்பா சாக வேண்டி வாங்கினது’
‘அப்படியா…?’
‘ஆமாடா…நம்ம அப்பா சாகும்போதும் நம்ம வாங்கலாம்…’
வெளியே இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டது தெளிவாகவேக் கேட்டது.
– சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.