புதுடில்லி:உலக பட்டினி குறியீடு அறிக்கையில், இந்தியா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதற்கு ‘கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல், தவறான மற்றும் உரிய முறையில் நடத்தப்படாத ஆய்வு இது’ என, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினி குறியீடு வெளியிடப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்தைச் சேர்ந்த ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’ என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த ‘வெல்ட் ஹங்கர் ஹில்பே’ என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
இதன், 2022ம் ஆண்டுக்கான பட்டியலில், 121 நாடுகளில் இந்தியாவுக்கு, 107வது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்தியா 101வது இடத்தில் இருந்தது.
இந்தியா கடந்தாண்டைவிட கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை, பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. இது குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா வைரஸ் காலத்திலும் மக்கள் பட்டினியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அனைத்து தரப்பு மக்களுக்கும் போதிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்தாண்டு பட்டியல் வெளியானபோதே, இந்தப் பட்டியலை வெளியிடும் கணிப்பு முறை குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்தினோம்.
இந்த நடைமுறை குறித்து, உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பிடம், இந்தாண்டு ஜூலையில் நம்முடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தோம்.
உரிய முறையில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதில்லை என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தோம். இருப்பினும் பழைய முறைப்படியே பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பு, நான்கு அம்சங்களின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதில், மூன்று அம்சங்கள், இளம் குழந்தைகளின் உடல்நலம் சார்ந்தவை.
இதுவே, ஒரு நாட்டின் மொத்த நிலையை பிரதிபலிக்காது. இந்தக் கருத்துக் கணிப்பு, தவறான முறைகள், நடைமுறை பிரச்னைகளுடன் நடத்தப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.
மேலும், மிகப் பெரிய நாட்டில், குறிப்பிட்ட 3,000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, மொத்த நாட்டின் நிலையாக உருவகப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கும் உரிய உணவு பொருட்கள் கிடைக்க அரசு எடுத்து வரும் நேர்மையான முயற்சிகளை, இந்தக் கருத்துக் கணிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
நாட்டில் உள்ள உண்மையான கள நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல், அரசின் முயற்சிகளை கருத்தில் கொள்ளாமல், வேண்டுமென்றே தவறான நோக்கத்துடன், தவறான வழியில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்