சென்னை மருத்துவர் கொலை வழக்கு; ஐகோர்ட் விசாரிக்கலாம் உத்தரவு பிறப்பிக்க கூடாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: சென்னை மருத்துவர் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க அனுமதித்த உச்சநீதிமன்றம், எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா என்பவர் நிலப் பிரச்னை தொடர்பாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், இன்ஜினியரான போரிஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், இன்ஜினியர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.

இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர். இவர்கள் விசாரணை தொடர்பான ஆவணங்களை வழங்குமாறும் கோரியிருந்தனர். இந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், ‘வழக்கு விசாரணை ெதாடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனர். இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘விசாரணை ஆவணங்கள் வழங்கல் குறித்து தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம். ஆனால் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது’ எனக்கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.