புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்பட உள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடந்த 17-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்காக நாடு முழுவதும் 65 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் இதில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவானது.
வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லியில் உள்ளகாங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குச் சீட்டுகள் இன்று ஒன்றாக கலக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. வாக்குச் சீட்டு எண்ணிக்கை முடிவடைந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என சசி தரூருக்கு ஆதரவு அளித்த கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.