லக்னோ: உத்தரபிரதேசத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற பாலியல் பலாத்கார குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கி பிடித்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த நன்பரா பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவர் ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், தனது நண்பர் ஆகாஷ் என்பவருடன் சேர்ந்து டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இவ்வழக்கில் இம்ரானின் நண்பர் ஆகாசை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இம்ரான் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கத்தோட் ஏரிப்பகுதியில் இம்ரான் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவ்வழியாக வந்த காரை மடக்கினர். அப்போது அந்த காரை நிற்காமல் வேகமாக சென்றது. தொடர்ந்து காரில் இருந்த நபர், போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து போலீசார் என்கவுன்டர் நடத்தி, காரை மடக்கினர்.
அப்போது காரில் இருந்த தேடப்பட்ட குற்றவாளி இம்ரான் போலீஸ் பிடியில் தப்பித்து ஓடினார். போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். இம்ரான் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் டிசிபி பிராச்சி சிங் தெரிவித்தார்.