தீபாவளியும் புருவ மழிப்பும்… தெலங்கானா பழங்குடி மக்களின் நூதன வழிபாட்டின் சிறப்பு!

பழங்குடி நாகரிகங்களுக்கும், கலாசாரங்களுக்கும் பஞ்சமே இல்லாத நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள் எப்போதும் அது குறித்து அறிவோரை வியக்கவைக்கவேச் செய்யும். ஏனெனில் இயற்கையோடு இயைந்து தத்தம் தினசரி வாழ்க்கையை கடப்பதில் வல்லவர்களாகவே கருதப்படுகிறார்கள் பழங்குடிகள்.
அந்த வகையில் தென்னிந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தெலங்கானாவைச் சேர்ந்த பழங்குடி கிராம மக்களின் நூதன பழக்கம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த தெலங்கானா பழங்குடி கிராமத்தினர் தலையை மொட்டையடித்துக் கொள்வதோடு, புருவத்தையும் முழுவதுமாக மழித்துவிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்களாம்.
image
அடிலாபாத் மாவட்டத்தின் உத்நூர் மண்டலத்தில் உள்ள கிராமம்தான் கல்லுருகுடா குடேம். இந்த கிராமத்து பழங்குடி மக்கள்தான் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு தங்களுடையை தலை முடி மற்றும் புருவத்தை மழிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
புருவத்தை மொத்தமாக மழிப்பதன் மூலம் தாங்கள் புனிதமானவர்களாக கருதப்படுவதாகவும் கல்லுருகுடா குடேம் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. புருவத்தை மழிக்காதவர்களை விவசாய பணிகளில் பழங்குடி மக்கள் அனுமதிப்பதில்லை என்ற விதியும் இருக்கிறதாம். மேலும் இந்த சடங்கை செய்வதற்காகவே பிரத்யேகமாக முடித்திருத்தம் செய்பவரை அழைத்து வருவார்களாம்.
இதை செய்வதற்காக அந்த பார்பருக்கு பழங்குடியினர் சார்பாக புது துணிகளும், வீட்டுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்படுகின்றன. முதலில் சிறுவர்களுக்கே இந்த சடங்குகளை செய்வார்களாம். அதன்படி இந்த ஆண்டு 40 சிறுவர்களுக்கு முடியையும், புருவத்தையும் மழித்திருக்கிறார்களாம். இதில் தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினர் வேத்மா பொஜ்ஜுவும் பங்கேற்றிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.