பணமோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில்பாலாஜி மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். இந்த மூன்று புகாரின் அடிப்படையில் நான்கு வழக்குகள் சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், தன் மீதான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜியும், காவல் துறை முறையாக விசாரணை நடத்தாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதன்படி நடைபெற்று வரும் வழக்கை ரத்து செய்ய கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது எனவும், தங்களையும் வழக்கில் இணைத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. இதேபோல் புகார் அளித்தவர்களும் வழக்கை ரத்து செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சிவஞானம், “வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்தார்.

அதேபோல் வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை மனுவையும் தள்ளுபடி செய்தார். செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் நிலுவையில் உள்ள இரண்டு முதல் தகவல் அறிக்கை மீது மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.