திண்டிவனம்: குடும்பப் பிரச்னை; சகலையை கட்டையால் அடித்துக் கொன்ற கூலித் தொழிலாளி! – போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயலட்சுமி – பொய்யாது தம்பதியினர். இவர்களுக்கு ரேவதி, சிவகாமி (இருவரின் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது) என இரண்டு மகள்கள். இதில், மூத்த மகளான ரேவதி, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் தளவாளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர்

இதேபோல் இளைய மகளான சிவகாமியும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தீவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். மேலும், ஜெகன் குடிப்பழக்கம் உடையவர் என்றும் கூறப்படுகிறது.

இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பிலிருந்தே சிவகாமி தன் கணவரைப் பிரிந்து, தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், அடிக்கடி மாமியார் வீட்டிற்குச் சென்று பிரச்னை செய்து வந்தாராம். எனவே, சிவகாமி சென்னையில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், இன்று காலை தன் மாமியார் வீட்டிற்குச் சென்ற ஜெகன், ‘என்னுடைய மனைவி எங்கே’ என கேட்டு வாக்குவாதம் செய்தாராம். அப்போது அங்கு வந்த ஜெகனின் சகலை அன்புராஜ்… அவரை தரக்குறைவாகப் பேசி, கட்டையைக் கொண்டு பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த ஜெகன், ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ரோஷணை காவல்துறையினர், ஜெகனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், அன்புராஜை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.