பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் இயக்குநராகவும் சில படங்களை எடுத்துள்ளார். இவர் தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் விதமாக படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான விஸ்வக் சென் முக்கியக் கதாபத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், விஸ்வக் படப்பிடிப்பிற்குச் சரியாக வரவில்லை என்றும் அதனால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் விஸ்வக் சென்னின் செயற்பாடுகள் சரியில்லை, ஷூட்டிங்குக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறியுள்ளார் படத்தின் இயக்குநர் அர்ஜுன்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன், “என் மகள் ஐஸ்வர்யாவை தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காக இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டேன். நடிகர் விஸ்வக் சென்னிடம் படத்தின் கதையைச் சொன்னேன். பின்னர் இப்படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுக்க ஒப்புக்கொண்டோம். ஆனால், கேரளாவில் ஜகாபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடந்த படப்பிடிப்பிற்கு அவர் வரவில்லை. என் வாழ்நாளில் இத்தனை முறை யாருக்கும் நான் போன் செய்ததில்லை.

தெலுங்கு முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் போன்றவர்கள் அர்ப்பணிப்புடன் சிறப்பாக நடித்து வருகின்றனர். ஒரு நடிகருக்கு அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியம். அது விஸ்வக் சென்னிடம் இல்லை என்பதால் அவரைப் படத்திலிருந்து நீக்கினேன். அதற்குப் பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தச் செய்தியை அனைவரிடமும் தெரிவிக்கத்தான் செய்தியாளர்களைச் சந்தித்தேன்” என்று கூறியுள்ளார்.