பெங்களூரு : கே.ஜி.எப்., திரைப்பட இசையை பயன்படுத்திய வழக்கில், ‘பாரத் ஜோடோ’ டுவிட்டர் கணக்கை முடக்கிய பெங்களூரு வணிக நீதிமன்றத்தின் உத்தரவை, கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று நீக்கி உத்தரவிட்டது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‘பாரத் ஜோடோ’ யாத்திரை மேற்கொண்டார். அப்போது, கே.ஜி.எப்., திரைப்பட பாடல் இசையில், கட்சியின் பிரசார பாடல்கள் வீடியோ ஒளிபரப்பப்பட்டன.
இந்த படத்தின் இசை உரிமம் பெற்றுள்ள எம்.ஆர்.டி.சி., நிறுவனம், அனுமதி பெறமால் இசைத்ததாக கூறி அளித்த புகாரின்படி, ராகுல் உட்பட அக்கட்சி தலைவர்கள் மீது பெங்களூரு யஷ்வந்த்பூர் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில், காங்கிரஸ் மற்றும் ‘பாரத் ஜோடோ’ யாத்திரை டுவிட்டர் கணக்கை முடக்கும்படி, பெங்களூரு வணிக நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் நேற்று மேல்முறையீடு செய்தது. நேற்று நடந்த விசாரணையின் போது, கே.ஜி.எப்., திரைப்பட பாடல் நீக்கப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, ‘டுவிட்டர்’ கணக்கை முடக்க உத்தரவிட்ட பெங்களூரு வணிக நீதிமன்றத்தின் உத்தரவை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீக்கி உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement