புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷிரத்தாவை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு வீசியதாகக் கூறிய அஃப்தாபுக்கு சைக்கோ அனாலிசிஸ் பரிசோதனை செய்ய டெல்லி காவல் துறை முடிவு செய்துள்ளது.
டெல்லி மஹரவுலி பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவை அவரது காதலன் அஃப்தாப் அமீன் பொன்னவாலா கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி நாய்களுக்கு வீசிய கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஃப்தாபிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த இளைஞருக்கு சைக்கோ அனாலிசிஸ் பரிசோதனை செய்ய டெல்லி காவல் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து வழக்கை விசாரிக்கும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த சைக்கோ அனாலிசிஸ் பரிசோதனையை மேற்கொள்ளும்போது அஃப்தாப் சொன்னது எல்லாம் உண்மைதானா என்பது உறுதியாகும். அஃப்தாபின் சில வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. அஃப்தாப் கொலையான ஷ்ரித்தாவுடன் என்ன மாதிரியான உறவில் இருந்தார் என்பதும் தெரியவில்லை. ஒருவேளை அஃப்தாப் மனநலம் சரியில்லாதவராக இருந்தால் அவர் மீதான நடவடிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கும். வழக்கை வேறுவிதமாக அணுக வேண்டியதிருக்கும். இப்போது ஆரம்ப கட்ட விசாரணைகள் நடந்து வருகின்றன. அவை முடிந்த பின்னர் அஃப்தாப் சைக்கோ அனாலிசிச் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பும் சில முக்கிய வழக்குகளில் டெல்லி போலீஸ் இதுபோன்ற சைக்கோ அனாலிசிஸ் பரிசோதனைகளை செய்துள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு தொடர்பாக 4 மாணவர்கள் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் உண்மையைத் தெரிவித்தனர். அதனால் இந்த சோதனை கைகொடுக்கும் என நம்புகின்றனர்.
நடந்தது என்ன? – கடந்த 2018-ம் ஆண்டில், ‘டேட்டிங்’ செயலி மூலமாக அஃப்தாப் அமீன் பொன்னவாலாவுடன் ஷிரத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. அஃப்தாபின் வீடு ஷிரத்தாவின் வீட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இருந்துள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக பணியாற்றினார்.இருவரின் காதலை ஷிரத்தாவின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் மும்பையில் தனியாக வசித்த அவர்கள், கடந்த மே 8-ம் தேதி டெல்லி மஹரவுலி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினர்.
கடந்த மே 18-ம் தேதி ஷிரத்தாவை, அஃப்தாப் கொலை செய்துள்ளார். அவரது நெஞ்சில் அமர்ந்து தலையணையால் ஷிரத்தாவின் முகத்தை நீண்ட நேரம் அழுத்தி உள்ளார். இதில் மூச்சுத் திணறி ஷிரத்தா உயிரிழந்துள்ளார்.
அவரது உடலை குளியல் அறைக்கு கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளார். பின்னர் கிரெடிட் கார்டு மூலம் பிரிட்ஜை வாங்கிய அவர், மற்றொரு கடையில் இறைச்சி வெட்ட பயன்படுத்தும் 5 கத்திகளை வாங்கி உள்ளார். அந்த கடைக்காரர் அஃப்தாப் கத்திகளை வாங்கியதை உறுதி செய்துள்ளார்.
குளியல் அறையில் நடந்த கொடூரம்: வீட்டின் குளியல் அறையில் வைத்து ஷிரத்தாவின் உடலை 35 துண்டுகளாக அஃப்தாப் வெட்டியுள்ளார். இதில் குடல் உள்ளிட்ட பாகங்களை அன்றிரவே அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று நாய்களுக்கு வீசியுள்ளார். மீதமுள்ள உடல் பாகங்களை கருப்பு நிற பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி பிரிட்ஜில் வைத்துள்ளார். அவ்வப்போது பிரிட்ஜை திறந்து ஷிரத்தாவின் தலையை பார்த்து ரசித்து உள்ளார்.
காலையில் வெளியே செல்லும் அஃப்தாப் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்பியுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு அலாரம் வைத்து எழும்பி வீட்டின் அருகே வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று ஷிரத்தாவின் உடல் பாகங்களை நாய்களுக்கு வீசி உள்ளார். தொடர்ச்சியாக 18 நாட்கள் அவர் உடல் பாகங்கள் வீசி அழித்திருக்கிறார்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். நான்தான் கொலை செய்தேன் என்று எவ்வித பதற்றமும் இன்றி அஃப்தாப் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தியில் பேசுவதை தவிர்க்கும் அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார். மஹரவுலி வனப்பகுதியில்அவரை அழைத்து சென்று உடல் பாகங்களை தேடி வருகிறோம். இதுவரை 10 உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. அவை மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும். ஷிரத்தாவின் தலையை தொடர்ந்து தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.